இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை படமாக்கப்படுகிறது. முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் தர்மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது. இந்த படத்திற்கு 800 என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு போஸ்டர் அண்மையில் வெளியானது. முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இதுமட்டுமல்லாமல் ஈழ தமிழர்கள் பலரும் முத்தையா முரளிதரனின் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பல எதிர்ப்புகளையும் தாண்டி இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது.
மேலும், இந்த படத்தில் அரசியல் இல்லை என்றும் முத்தையாவின் வாழ்க்கை வரலாறு சம்மந்தப்படுத்திதான் படம் உருவாகிறது என்று தெரிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.
இந்நிலையில் இயக்குனர் சேரன் இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிடுகையில், “உலகம் முழுவதுமிருந்து தமிழர்களின் வேண்டுகோள் 800 வேண்டாம் என.. உங்களை வாழவைத்த மக்களைவிட, உணர்வை விட, தமிழ் ஈழ மக்களின் உயிர்போன கொடும் நிகழ்வை விட இந்தப்படம் பெரிதல்ல சகோதரா.. விட்டுவிடுங்கள். உங்களின் நடிப்புத்தீனிக்கு ஆயிரம் கதாபாத்திரங்கள் காத்திருக்கிறது” என்று தெரிவித்தார்.