கரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் ஓடிடி கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது. திரையரங்கில் வெளியாகும் படங்களுக்கு தணிக்கை போன்ற பிரச்சினைகள் உள்ளன. ஆனால், ஓடிடியில் வெளியாகும் படங்களுக்கு அப்படியில்லாமல், நாம் நினைத்ததைப் படமாக்கி வெளியிட முடியும். இதனாலேயே இதற்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதன் காரணமாக ஓடிடியில் பெரும்பாலும் சர்ச்சைக்குரிய படங்களே அதிகளவில் வெளியாகி வரவேற்பை பெறுகின்றன. அந்த வகையில் நடிகை சமந்தா நடித்துள்ள ‘தி ஃபேமிலி மேன்-2’ என்ற சர்ச்சைக்குரிய வெப் தொடர் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியானது.
அதில் சமந்தா தமிழீழப் போராளியாக நடித்துள்ளார். இது தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மேலும், இந்தப் படத்துக்குப் பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்ற நிலையில், இப்படம் குறித்து நடிகர், இயக்குநர் சேரன் சமூகவலைதளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில்... "தமிழ் இனத்தின் விடுதலைக்கு போராடிய இயக்கத்தின் வரலாறை கொச்சைப்படுத்தி தவறாக சித்தரிக்கும் இந்த வெப் தொடரை புறக்கணிக்கிறேன். இந்த தொடரை உடனே நிறுத்தவும். நிறுத்தும்வரை அமேசான் பிரைம் சந்தாதாரராக இருக்கவோ இணையவோ போவதில்லை" என கூறியுள்ளார்.