இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் சமுத்திரக்கனி, மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான 'ஏலே' திரைப்படம், சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நெட்ஃபிலிக்ஸ் தளத்திலும் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததோடு மட்டுமின்றி, படக்குழுவினருக்கும் பல தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்த நிலையில், ஏலே படம் பார்த்து நெகிழ்ச்சியடைந்த இயக்குநர் சேரன், அது குறித்து ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார். அப்பதிவில், "ஏலே... எத்தனை பேர் பார்த்தீங்க நெட்பிலிக்ஸ்ல.. ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரங்கள். மிகப்பிரமாதமாக, அதேசமயம் உண்மையாக வடிவமைக்கப்பட்ட புதிய கதாபாத்திரங்கள். தம்பி சமுத்திரக்கனிக்கு வாழ்த்துகள். அந்த கதாபாத்திரத்தை வைத்துக்கொண்டு அப்பா மகனுக்கான உணர்வுகளைப் பார்வையாளனுக்கு கடத்துவது அற்புதம். 'தவமாய் தவமிருந்து' போன்ற அப்பாக்களின் மனதை அளந்துவிடலாம். இதுபோன்ற அப்பாக்களின் மனதில் கிடக்கும் அவலங்களை அலசுவதும் அவருக்காகக் கண்ணீர்விட வைப்பதும் சாத்தியம் குறைவான விசயம். அதில், ஹலிதா ஷமீம் வென்றிருக்கிறார். திரையில் யூகிக்க முடியாத கதாபாத்திரங்களைக் கையாளுவதன் மூலம்தான் புதிய சினிமாக்கள் உருவாகும்.. அப்படிப்பட்ட ஒரு சினிமாதன் ஏலே. 'சில்லுக்கருப்பட்டி' போல இது ஒரு அச்சுவெல்லம். சமுத்திரக்கனி மூன்று மாதிரியான கதாபாத்திரங்களை வெளுத்து வாங்கியிருக்கிறான். இதெல்லாம் ஹீரோக்கள் செய்ய மறுக்கும் கதாபாத்திரங்கள். செய்து காட்டிவிட்டான் தம்பி" எனக் குறிப்பிட்டுள்ளார்.