சமீப காலமாக ஓடிடி-யின் வளர்ச்சி அதிகமாக இருப்பதால், பல படங்கள் நேரடியாக அதில் வெளியாகின்றன. இந்த சூழலில் ஓடிடியில் சென்சார் இல்லாததால் அதிக வன்முறை மற்றும் ஆபாச காட்சிகள் இடம் பெறுவதாக ஒரு குற்றச்சாட்டு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. மேலும் சமூக வலைத்தளங்கள் மற்றும் சில செயலிகளிலும் அதிக ஆபாச வீடியோக்கள் உலா வரும் சூழலில், தற்போது இது தொடர்பாக ஓடிடி, செயலிகள், இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளது தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம்.
அந்த வகையில் ஆபாச காட்சிகள் அதிகம் இடம்பெற்றிருந்த 18 ஓடிடி தளங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் டிரீம் பிலிம்ஸ், வூவி, யெஸ்மா, அன்கட் ஆடா, ட்ரை ஃபிளிக்ஸ், எக்ஸ் பிரைம், நியான் எக்ஸ், விஐபி பேஷரம்ஸ், ஹன்டர்ஸ், ரேபிட் எக்ஸ்ட்ராமூட், நியூஃப்லிக்ஸ், மூட்எக்ஸ், மொஜிப்பிலிஸ், ஹாட் ஷாட்ஸ் விஐபி, ஃபியூகி, சிகூஃப்லிக்ஸ், பிரைம் ப்ளே ஆகியவை உள்ளன. மேலும் ஆபாச காட்சிகளை ஒளிபரப்பி வந்த 10 செயலிகள் மற்றும் 57 வலைத்தள பக்கங்களும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
பலமுறை எச்சரித்தும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தை மீறும் வகையில் ஆட்சேபத்திற்குரிய காட்சிகளை இடம்பெறச் செய்ததால் நடவடிக்கை இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முகநூல் பக்கத்தில் 12 கணக்குகள், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 17 கணக்குகள், எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் 16 கணக்குகள், யூடியூபில் 12 கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. இதில் தடைசெய்யப்பட்ட ஒரு ஓடிடி தளத்தில் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமான பதிவிறக்கங்கள் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து மட்டும் 50 லட்சம் பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.