சர்ச்சைக்குரிய திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இசையமைத்து, இயக்கியுள்ள படம் ‘ஆன்டி இண்டியன்’. இப்படம் கடந்த ஏப்ரல் மாதத்தில் சென்சார் குழுவினருக்குத் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. பொதுவாக சர்ச்சைக்குரிய வசனங்கள் அல்லது காட்சிகள் இருந்தால், அவற்றை மாற்றவோ அல்லது நீக்கவோ சொல்வது சென்சார் குழுவினரின் வழக்கம். ஆனால் 'ஆன்டி இண்டியன்' படத்தைப் பார்த்த சென்சார் குழுவினர் படத்தை முழுமையாக நிராகரித்து சென்சார் வழங்க மறுத்தனர்.
அதன் பிறகு ரிவைசிங் கமிட்டி எனச் சொல்லப்படும் மறு தணிக்கைக்கு இப்படம் அனுப்பப்பட்டது. பெங்களூரில் பிரபல இயக்குநர் நாகபரணா தலைமையில் பத்து பேர் கொண்ட குழுவினர் படத்தைப் பார்த்தனர். படம் பார்த்து முடித்த பிறகு, படம் மிகவும் சிறப்பாக உள்ளதென படக்குழுவினருக்கு பாராட்டுத் தெரிவித்த மறுதணிக்கை குழுவினர், படத்திற்கு சென்சார் வழங்க வேண்டுமென்றால் படத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டுமென நிபந்தனை விதித்தனர்.
அதாவது, “‘ஆன்டி இண்டியன்’ எனும் பெயரை மாற்றிவிட்டு வேறு பெயர் வைக்க வேண்டும். நடிகர் கபாலி எனும் வசனம் அடிக்கடி வருகிறது. அப்பெயரைக் கொண்ட வசனம் வரும் காட்சிகள் அனைத்தையும் நீக்க வேண்டும். கமுக, அகமுக என்று வரும் இரண்டு கட்சிகளின் பெயர்களையும் நீக்க வேண்டும். இப்படத்தில் வரும் தேசியக்கட்சி அரசியல்வாதி கதாபாத்திரம் ஒன்றின் பெயர் 'ராஜா' என்று இருக்கிறது. அந்தப் பெயரையும் நீக்க வேண்டும். நாங்கள் தரும் 38 கட்களையும் ஏற்றுக்கொண்டு, படத்தில் அவற்றை எடிட் செய்து மறு தணிக்கைக்கு உட்படுத்தினால், U/A சான்றிதழ் தருகிறோம்" என மறு தணிக்கை குழுவினர் கூறியுள்ளனர். மேற்கண்ட மாற்றங்களைப் படத்தில் செய்தால் அது படத்தின் போக்கையே பாதித்துவிடும் எனக் கருதிய ‘ஆன்டி இந்தியன்’ படக்குழுவினர், மேல் மறுதணிக்கைக்குப் படத்தை அனுப்ப முடிவுசெய்துள்ளனர். மறுதணிக்கையிலும் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காதது ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'உட்தா பஞ்சாப்', 'பத்மாவதி' போன்ற ஹிந்தி படங்களுக்கு அடுத்து அதிகப்படியான கட்களை வாங்கிய திரைப்படம் ‘ஆன்டி இண்டியன்’ என்பது குறிப்பிடத்தக்கது.