Skip to main content

“திரைத்துறைக்கு ஒரு கருப்பு நாள்”-கிரேசி மோகனுக்கு இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்...

Published on 10/06/2019 | Edited on 10/06/2019

பிரபல நகைச்சுவை நடிகரும், கதை, திரைக்கதை ஆசிரியரும், வசனகர்த்தாவும், நாடகக்கலைஞருமான கிரேசிமோகன்(66) மாரடைப்பால் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்.    கவலைக்கிடமான நிலையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் 2 மணிக்கு காலமானார்.
 

crazy mohan

 

 

இந்நிலையில் அவரது மறைவிற்கு திரை பிரபலங்கள் ட்விட்டரிலும் நேரடியாகவும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
 

வைரமுத்து,  “கிரேசி மோகன் மறைவு எதிர்பாராதது. ஒரு நகைச்சுவை அழவைத்துவிட்டுப் போய்விட்டது. அவர் வெறும் நாடக ஆசிரியர் மட்டும் அல்லர். வெண்பா எழுதத் தெரிந்த விகடகவி. யாரையும் வருத்தப்படவைக்காத நகைச்சுவையாளர் எல்லாரையும் வருந்தவிட்டுப் போய்விட்டார். சோகம் மறைந்து போகும்; நகைச்சுவை நிலைக்கும்.”
 

சித்தார்த் , “கிரேசி மோகன் மறைந்துவிட்டார். சினிமாவுக்கு, நாடகத்துக்கு, சிரிப்புக்கு, வாழ்க்கைக்கு ஒரு வருத்தமான நாள். அவரைப்போல இன்னொருவர் என்றும் வரமுடியாது. அவரது ஆன்மாவுக்கு என் பிரார்த்தனைகள். குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள். நம் தமிழ் உணர்வின் மிகப்பெரிய அங்கம் அவர்”
 

குஷ்பு , “கிரேசி மோகனின் மறைவு குறித்த செய்தி இப்போதுதான் கிடைத்தது. துரதிர்ஷ்டவசமாக சிகிச்சை பலனளிக்கவில்லை. ஒரு மேதை, ஒரு பாரம்பரியத்தை விட்டுச் சென்றிருக்கிறார். அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்”
 

 

சரத் குமார், “தொடர் நகைச்சுவை,யாரையும் புண்படுத்தாத வசனங்கள்,குறும்பான கதாபாத்திரங்கள்,நகைச்சுவை நாடகங்கள்,இவை மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த #கிரேஸி மறைவு கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.அவரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்”
 

காயத்ரி ரகுராம், “கிரேசி மோகன் இறந்து போனதில் மனமுடைந்து போனேன், அதிர்ச்சியானேன். எனது தந்தையின் நெருங்கிய நண்பர். எனது இயக்கத்தை ஆரம்பிப்பதற்கு முன், அவருடன் உட்கார்ந்து, அவரது யோசனைகளைக் கேட்டுப் பெற்றது நினைவில் இருக்கிறது. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் கிரேசி மோகன் சார். நீங்கள் சினிமாவுக்கு ஒரு இனிமையான பரிசு. உங்கள் மறைவு கண்டிப்பாக உணரப்படும்”
 

வரலஷ்மி சரத்குமார், “நமது திரைத்துறைக்கு ஒரு கருப்பு நாள் இன்று. ஒரே நாளில் இரண்டு அற்புதக் கலைஞர்களை இழந்திருக்கிறோம். அவர்கள் இழப்பு கண்டிப்பாக உணரப்படும். நமக்கு மிகப்பெரிய இழப்பு. அவர்கள் விட்டுச்சென்ற மரபிலிருந்தும் திறமையிலிருந்தும் நம்மால் கற்றுக்கொள்ள முடியும் என நம்புகிறேன்”

 

 

சார்ந்த செய்திகள்