தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் சில வருடங்களாகவே புற்றுநோய்க்குச் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் சமீபத்தில் இர்ஃபான் கானின் தாயார் சயீதா பேகம் ஜெய்ப்பூரில் காலமானார். தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் அவரால் அங்குச் செல்ல முடியவில்லை. இதனால் வீடியோ கால் மூலம் தனது அம்மாவுக்கான இறுதி மரியாதையைச் செலுத்தினார் நடிகர் இர்ஃபான் கான். இந்நிலையில், நேற்று திடீரென உடல்நிலை மோசமடைந்ததால் அவர் மும்பையின் கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 53 வயதான இர்ஃபான் கான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்குப் பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவை பின் வருமாறு...
''மிக விரைவில் எங்களை விட்டு பிரிந்து சென்றுவிட்டிர்கள் இர்ஃபான் ஜி. உங்கள் பணி எப்போதும் என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. எனக்குத் தெரிந்த மிகச் சிறந்த நடிகர்களில் நீங்களும் ஒருவர், நீங்கள் நீண்ட காலம் வாழத் தகுதியானவர். இந்த நேரத்தில் உங்கள் குடும்பத்திற்குப் பலம் கிடைக்கட்டும்'' என கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
''இந்திய சினிமாவின் மிகப்பெரிய தூதர்களில் ஒருவரான நடிகர் இர்ஃபான் கான் நம்மை விட்டுப் பிரிந்து சென்றுள்ளார். அதுவும் மிக விரைவில் பிரிந்து சென்றுவிட்டார்'' என ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
''இர்ஃபான் கான் சாரின் திடீர் மறைவிற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். கடைசிவரை போராடிய பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய நடிகர் அவர். பல்வேறு நடிகர்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி. உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்'' என ஹரிஷ் கல்யாண் இரங்கல் தெரிவித்துள்ளார்.
''கண்டிப்பாக உங்கள் இழப்பு அதிகம் உணரப்படும். உங்களது அற்புதமான திரை நடிப்பை நாங்கள் என்றும் மகிழ்ச்சியுடன் நினைவில் வைத்திருப்போம். அவரது குடும்பத்துக்கு இந்த இழப்பைத் தாங்கும் வலிமை கிடைக்கட்டும். இதைவிட மோசமான செய்தி இருக்க முடியாது'' என காஜல் அகர்வால் இரங்கல் தெரிவித்துள்ளார்.
''இன்று கண் விழித்ததும் நிறைய சோகம், அதிர்ச்சி. ஆன்மா சாந்தியடையட்டும் இர்ஃபான் கான். உங்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. நீங்கள் நடித்த படங்கள், உங்கள் திறமை, கண்ணியம் கண்டு நான் எப்போதும் ஆச்சரியமடைவேன். அவரது குடும்பத்துக்கு இந்த இழப்பைத் தாங்கும் வலிமை கிடைக்கட்டும்'' என த்ரிஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.
''இது மிகப்பெரிய சோகம். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் இர்ஃபான் சார். அற்புதமான கலைஞனை, மனிதனை சினமா துறை இழந்துவிட்டது. உங்கள் இல்லாமை உணரப்படும். சொர்க்கத்தில் மகிழ்ச்சியைப் பரப்புங்கள்'' என மாதவன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
''இந்தச் சோகமான செய்தியைப் படிக்கும்போது அதிர்ச்சியடைந்தேன். ஒரு அற்புதமான நடிகரின் இழப்பை நாம் உணரப்போகிறோம். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் இர்ஃபான் கான். உங்களது அழகான திரைப்படங்கள் மூலமாக என்றும் உங்களை நினைவில் வைத்திருப்போம்'' எனத் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
''மிகச் சிறந்த நடிகரையும், அதையும் தாண்டி ஒரு அன்பான மனிதரையும் நாம் இழந்துவிட்டோம் என்பதை நினைத்து அதிகம் வருத்தப்படுகிறேன். நீங்கள் என்றும் எங்கள் இதயங்களில் இருப்பீர்கள் சார். அவரது குடும்பத்துக்கு இழப்பைத் தாங்கும் பலம் கிடைக்கட்டும். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் இர்ஃபான் கான்'' என ரகுல் ப்ரீத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
''அதிக வலியைத் தருகிறது. இது மிகவும் சீக்கிரம் இர்ஃபான். சர்வதேச கலைக்கு உங்களின் பங்களிப்புக்கு நன்றி. உங்களது இழப்பை உணருவோம். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்'' பிரகாஷ் ராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
''உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் இர்ஃபான் கான். இந்தியச் சினிமாவுக்கு உங்களால் ஆன பங்களிப்பை, எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் கொடுத்திருக்கிறீர்கள். உங்கள் இழப்பு உணரப்படும்'' என ப்ரித்விராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
''நீங்கள் செய்த ஒவ்வொரு பணிக்கும் நீங்கள் கொண்டு வந்த அழகு, ஒரு மாயாஜாலம். உங்களது திறமை, பலருக்கு, பல வழிகளில் வாய்ப்புகளைக் கொடுத்தது. எங்களில் பலருக்கு நீங்கள் ஆதர்சம். உங்கள் இழப்பு கண்டிப்பாக உணரப்படும் இர்ஃபான் கான். அவரது குடும்பத்துக்கு இரங்கல்கள்'' எனப் பிரியங்கா சோப்ரா இரங்கல் தெரிவித்துள்ளார்.
''இர்ஃபானின் திடீர் மரணம் பற்றிக் கேள்விப்பட்டு மனமுடைந்துவிட்டேன். இந்தியச் சினிமாவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது மனைவிக்கும், மகன்களுக்கும் என் அனுதாபங்கள். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் இர்ஃபான் கான்'' என அஜய் தேவ்கன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
''இர்ஃபான் கானின் மரணச் செய்தி கேட்டதில் அதிர்ச்சி, வருத்தம். எவ்வளவு அற்புதமான நடிகர் அவர். நீங்கள் தந்த நினைவுகளுக்கு நன்றி சார். சகாப்தமே, இந்தியா உங்களது இழப்பை உணரும். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்'' என நிவின் பாலி இரங்கல் தெரிவித்துள்ளார்.
''மிக மோசமான செய்தி. இர்ஃபான் கானின் மரணம் பற்றிக் கேள்விப்பட்டு சோகமடைந்தேன். நம் காலகட்டத்தின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர். இந்தக் கடினமான நேரத்தில் அவரது குடும்பத்துக்கு கடவுள் வல்லமை தரட்டும்'' என அக்ஷய் குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
''இர்ஃபான் கானின் திடீர் மரணம் பற்றிய செய்தியால் ஆழ்ந்த வருத்தமடைந்துள்ளேன். ஒரு அற்புதமான நடிகர் நம்மை சீக்கிரம் பிரிந்து சென்றுவிட்டார். கண்டிப்பாக அவர் இல்லாத குறையை உணருவோம். அவரது குடும்பத்துக்கும், நெருக்கமானவர்களுக்கும் எனது மனமார்ந்த அனுதாபங்கள். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்'' என மகேஷ் பாபு இரங்கல் தெரிவித்துள்ளார்.
''இப்போதுதான் இர்ஃபான் கான் மறைவு குறித்த செய்தியைப் பார்த்தேன். அதிக பாதிப்பையும், வருத்தத்தையும் இந்தச் செய்தி தந்துள்ளது. அற்புதமான திறமை. கருணையுள்ளம் கொண்ட சக நடிகர். உலக சினிமாவுக்கு நிறைவான பங்காற்றியவர். சீக்கிரம் நம்மைப் பிரிந்துவிட்டார். பெரிய வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளார்" என அமிதாப்பச்சன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
''இர்ஃபான் கான் காலமானதைக் கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன். இந்த நேரத்தில் உங்கள் குடும்பத்திற்குப் பலம் கிடைக்கட்டும். உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்'' என கஜோல் இரங்கல் தெரிவித்துள்ளார்.
''இர்பான் கானின் இழப்பைக் கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்துள்ளேன். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்'' என மோகன்லால் இரங்கல் தெரிவித்துள்ளார்.
''இர்ஃபான் கான் காலமான செய்தியைக் கேட்டு வருத்தமாக இருக்கிறது. அவர் எனக்கு மிகவும் பிடித்தவர். நான் அவருடைய எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன், கடைசியாக அவர் நடித்த ஆங்ரேஸி மீடியம் படத்தில் அவருக்கு நடிப்பு சிரமமின்றி வந்தது, அதில் அவர் நடிப்பு பயங்கரமானது. அவரது ஆன்மா அமைதியாக இருக்கட்டும். அவரது அன்புக்குரியவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்'' என சச்சின் டெண்டுல்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் மறைந்த நடிகர் இர்ஃபான் கானுக்கு இன்னும் பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.