காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரையின்படி காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு காவிரியில் 15 நாட்களுக்கு 5,000 கன அடி நீர் திறக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் குடிநீர் பிரச்சனை, நீர்ப்பற்றாக்குறை இருப்பதால் உத்தரவைப் பின்பற்ற இயலாது; 2 ஆயிரம் கன அடிநீர் மட்டுமே திறந்து விட முடியும் என்று கர்நாடக அரசு தெரிவித்தது. மேலும் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் உள்ள விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கன்னட நடிகர்கள் சிவராஜ் குமார், "இரு மாநில தலைவர்களும், நீதிமன்றமும் அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்து சுமுக தீர்வு காண வேண்டும்" எனவும் கிச்சா சுதீப், "நம் காவிரி நம் உரிமை. இவ்வளவு ஒருமித்த கருத்துடன் வெற்றி பெற்ற அரசு காவிரியை நம்பும் மக்களை கைவிடாது" எனவும் அவர்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
இதனிடையே காவிரியில் நீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகள் அமல்படுத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பு வந்துள்ளது. இதனால் விவசாயிகளின் போராட்டம் அங்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கன்னட அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் செய்தியாளர்களை சந்தித்த நிலையில் ரஜினிகாந்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் பேசுகையில், "தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவுக்கும் இடையே போர் வரும் சூழல் இது. தமிழ் படங்களுக்கு தடை விதிப்போம். ரஜினிகாந்த் கர்நாடகாவிற்குள் நுழையக்கூடாது. காவிரி குறித்த அவரது நிலைப்பாட்டை தெரிந்து கொள்ள விரும்புகிறோம். ரஜினிகாந்த், நீங்கள் கர்நாடகாவுக்காக நிற்பீற்களா அல்லது தமிழ்நாட்டிற்காக நிற்பீற்களா என்பதை தெளிவுபடுத்துங்கள்" என்றார்.