விளையாட்டுத்துறையில் சிறந்து விளக்கியவர்களுக்கு வழங்கும் அர்ஜுனா விருதைப் பெற்றவரும், முதல் அர்ஜுனா விருது பெற்ற கேரம் வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் மரிய இருதயம். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் தற்போதைய தமிழ்நாடு கேரம் சங்க செயலாளராக பணியாற்றி வருகிறார். அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களால் நல்ல வரவேற்பு பெற்ற வடசென்னை படத்தில் கேரம் பயிற்சியாளராகத் தனது பங்களிப்பைக் கொடுத்துள்ளார். மரிய இருதயமை நக்கீரன் வாயிலாகச் சந்தித்தபோது, தனது கேரம் விளையாட்டு வாழ்க்கை அனுபவங்களையும் வடசென்னை படத்தில் பணியாற்றிய அனுபவங்களையும் நம்மோடு பகிர்ந்துள்ளார்.
மரிய இருதயம் பேசுகையில், “நான் வீட்டிற்கு ஓரே பையன். என்னுடைய 3 வயதில் அம்மா இறந்துவிட்டார். அப்பா இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். நான் படித்து நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்று அவர் நினைத்தார். ஆனால், ஒரு கேரம் போட்டியில் நான் வெற்றி பெற்று அந்த புகைப்படம் நாளிதழில் வந்ததைப் பார்த்து என்னை கேரம் விளையாட அனுமதித்தார். கேரம் எனக்கு சின்ன வயதிலிருந்து பிடிக்கும். ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது என்னுடைய உறவினர் ஒருவர், நேஷ்னல் சாம்பியன் லாசரை அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் வாங்கிய வெற்றிக் கோப்பைகளைப் பார்த்து எனக்கும் கேரம் விளையாட்டில் ஆர்வம் அதிகரித்தது. அந்த ஆர்வத்துடன் சேர்த்து என்னுடைய முயற்சியின் வெளிப்பாடுதான் 9 முறை நான் நேஷ்னல் சாம்பியன் ஆனதற்கும் அர்ஜுனா விருது கிடைப்பதற்குகம் காரணம்.
நான் புறா பந்தையத்தில் ஆர்வம் காட்டுவேன். அப்படித்தான் எனக்கு இயக்குநர் வெற்றி மாறன் பழக்கமானார். அதன் பிறகு என்னுடைய வீட்டிற்கு வெற்றி மாறன் இரண்டு மூன்று முறை வந்தார். நன்றாக பழகினார். ஒருமுறை நானும் அவரும் பேசிக்கொண்டு இருக்கும்போது, என்னுடைய கேரம் விளையாட்டைப் பற்றி நான் பேசினேன். பின்பு திடீரென ஒருநாள் கேரம் தொடர்பாக படம் இயக்குவதை சொன்னார். அதோடு கேரம் விளையாட்டு தொடர்பாக நடந்த சில சண்டைகளைப் பற்றி கேட்டார். சில நாட்களுக்கு பிறகு நுங்கம்பாக்கம் அலுவலகம் வரச்சொல்லி தனுஷுக்கு கேரம் பயிற்சியளிக்க சொன்னார்.
கேரம் பயிற்சியளித்தபோது முதலில் தனுஷ் கொஞ்சம் தடுமாறினார். ஆனால் இரண்டு நாட்களில் விரல்களை சரியாகப் பயன்படுத்தினார். ஜெயில் சீனுக்கு துணை நடிகர்கள் வேண்டுமென்று வெற்றிமாறன் கேட்டார். எனக்கு தெரிந்த சில கேரம் விளையாட்டு வீரர்களை அனுப்பி வைத்தேன். ஆனால் இதுவரை வெற்றிமாறனிடம் நான் பணம் கேட்டதில்லை. பழகிய நட்புக்காக கேரம் பயிற்சியளித்தோம். இப்போது கால் செய்தால் கூட என்னிடம் நன்றாக பேசுவார்” என்றார்.