அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 12 ஆம் தேதி வெளியான படம் கேப்டன் மில்லர். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் வரவேற்பைப் பெற்று வருகிறது. அதன் காரணமாக படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன், தனுஷை நேரில் சந்தித்து மாலை அணிவித்து மகிழ்ந்தார்.
அமைச்சர் உதயநிதி இப்படத்திற்கு, “ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமையை அடிப்படையாக வைத்து கேப்டன் மில்லர் என்கிற அருமையானதொரு படைப்பு. மனித உரிமைப் போராட்டத்தின் மகத்துவத்தை விடுதலைப் போராட்டக் கதைக்களத்தின் ஊடாக அழுத்தமாகப் பேசியிருக்கிறார் கேப்டன் மில்லர்” எனக் குறிப்பிட்டு படக்குழுவிற்கு பாராட்டு தெரிவித்திருந்தார். இதற்கு தனுஷும் “உங்களுக்கு பிடித்த கலையை, நீங்கள் பாராட்ட தவறியதே இல்லை” எனக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இப்படத்தின் கதை திருடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி, அவர் எழுதிய ‘பட்டத்து யானை’ நாவலை திருடி, கேப்டன் மில்லர் எடுத்துள்ளதாகக் கூறியுள்ளார். மேலும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் முறையிடப்போவதாகத் தெரிவித்துள்ளார்.