உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பலரைப் பாதித்து வருகிறது. இந்த தொற்றின் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
இந்தியாவிலும் பாதிக்கப்பட்டோர் மற்றும் இறந்தவர்கள் எண்ணிக்கை கூடுகிறது. வைரஸ் தொற்றைத் தடுக்கும் பொருட்டு ஏப்ரல் 14ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரபலங்கள் கரோனா பரவலைத் தடுப்பதற்காக முதலமைச்சர் நிவாரண நிதி அல்லது பிரதமர் நிவாரண நிதி உள்ளிட்டவைகளுக்கு நிதி அளித்து வருகின்றனர். இதுவரை நிதி அளித்தவர்களில் பெரும்பாலானவர்கள் நடிகர்களே, முன்னணி நடிகைகள் இதுவரை எந்தவித உதவியும் செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் பிரம்மாஜி இதுகுறித்து பேசுகையில், “பல முன்னணி நடிகைகள் மும்பையைச் சேர்ந்தவர்கள். இங்கு தெலுங்கில் நல்ல சம்பளம் வாங்குகிறார்கள். நட்சத்திர அந்தஸ்தும் அவர்களுக்குக் கிடைக்கிறது. ஆனால் லாவண்யா திரிபாதி போன்ற நடிகைகளைத் தவிர வேறு யாரும் நிவாரண நிதிக்கு எந்தவித பங்களிப்பும் செய்யாதது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் லட்சங்களைக் கொடுக்கத் தேவையில்லை. ஆனால், குறைந்தது ஆயிரங்களையாவது இந்த நிவாரண நிதிக்கு நீங்கள் உதவி செய்யலாம்” என்றார்.
பிரம்மாஜி ரூ. 70,000 நிதியுதவியைத் தெலுங்கு திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்திற்கு அளித்தார்.