சீனா மற்றும் ஹாங்காங்கில் கடந்த 2002 ஆம் ஆண்டில் பரவிய சார்ஸ் நோயை ஏற்படுத்திய அதே வைரஸ் குடும்பத்தை சேர்ந்த இந்த கரோனா வைரஸ், சுவாச மண்டலத்தில் கோளாறுகளை ஏற்படுத்தி, கடும் காய்ச்சலை ஏற்படுத்தி மனித உயிர்களை பறிக்கக்கூடிய ஆபத்து கொண்டதாகும். உலகம் முழுவதும் 23 நாடுகளில் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 14,000 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இந்த வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் பெரும்பாலானவை சீனாவுடனான போக்குவரத்து தொடர்புகளை துண்டித்துள்ளன. உலக சுகாதார அமைப்பு அவசரநிலையை அறிவித்துள்ள சூழலில், வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன இந்நிலையில் இந்த வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 361 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது இந்தியாவிலும் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் மூன்று பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் தமிழகத்திலும் இந்த வைரஸ் குறித்த அச்சம் நிலவி வருகிறது.
இந்நிலையில் பிரபல தமிழ் காமெடி நடிகரான போண்டா மணி கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்று பரவிய வதந்தியை அடுத்து போண்டா மணி தான் கரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.