நடிகர் பாபி சிம்ஹா, கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் உள்ள தனக்குச் சொந்தமான இடத்தில் வீடு கட்டி வந்துள்ளார். கட்டுமான பணிகளை கொடைக்கானலைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் ஜமீர், காசிம் முகமது ஆகியோரிடம் கொடுத்துள்ளார். இதற்காக அவர்களுக்கு பெரிய தொகை கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதிக பணம் பெற்ற ஒப்பந்ததாரர்கள் வீட்டைக் குறைந்த பணத்தில் கட்டி வந்ததாகச் சொல்லப்படுகிறது.
இதையடுத்து ஒப்பந்ததாரர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக இருந்தவர்கள் மீது கொடைக்கானல் காவல் நிலையம் மற்றும் கொடைக்கானல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திலும் பாபி சிம்ஹா புகார் அளித்தார். அதன் அடிப்படையில் ஒப்பந்ததாரர்கள் ஜமீர், காசிம் முகமது அவர்களுக்கு ஆதரவாக இருந்த உசேன், மகேந்திரன் உள்ளிட்டோர் மீது கொடைக்கானல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து உசேன் என்பவர் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நிலையில், "நான் சென்னை மற்றும் கொடைக்கானலில் கடந்த 30 வருடமாக ரிஸாட் நடத்தி வருகிறேன். இந்நிலையில், என் நண்பரும் நடிகருமான பாபி சிம்ஹா என் மீது பொய் புகார் கூறி தனது செல்வாக்கைப் பயன்படுத்தி வழக்குப் பதிவு செய்துள்ளார்" எனக் கூறி சில ஆவணங்களையும் வெளியிட்டார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாபி சிம்ஹா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "90 சதவீதம் முடித்த வீடு என்று சொன்னார். ஆனால் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை பார்த்தால் தெரியும். நான் நீதிமன்றத்தை நாடியிருக்கிறேன். நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நான் கஷ்டப்பட்டு முன்னேறி என்னுடைய பெற்றோருக்காக வீடு கட்ட வேண்டும் என ஆசைப்படுகிறேன். அதை ஒரு கூட்டம் தடுக்கிறது. கேட்டால் அரசியல் பின்புலம் இருப்பதாக சொல்கிறது. எனக்கே இந்த நிலைமை என்றால் மற்றவர்கள் பற்றி தெரியவில்லை.
அரசியல் பின்புலத்தினால் இதுபோன்று நடக்குமா என தெரியவில்லை. முதல் முறையாக இதுபோன்ற சூழலை கொடைக்கானலில் எதிர்கொள்கிறேன். நான் கொடைக்கானலை சேர்ந்தவன். 30 வருஷமாக இங்கு இருக்கிறேன். அவர்களை கண்மூடித்தனமாக நம்பிவிட்டேன். அதுதான் நான் பண்ண தப்பு. காசு வாங்கிவிட்டு ஏமாத்திவிட்டார்கள். ஆளே காணவில்லை" என்றார்.