
சமீபகாலங்களில் தமிழ் படங்களுக்கு நிகராக ஹாலிவுட் படங்களும் தமிழகத்தில் தொடர்ந்து வசூல் சாதனைகள் நிகழ்த்தி வருகின்றன. அதற்கு முக்கிய காரணமாக பிராந்திய மொழிகளில் ஹாலிவுட் படங்களை டப்பிங் செய்து வெளியிடுவதாலும், மேலும் அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக தயாராகி இந்த படங்கள் வெளிவருவதாலும் ரசிகர்கள் விரும்பி பார்க்கிறார்கள். மேலும் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் இந்தியாவிலும் இப்படங்கள் வசூல் குவிக்கின்றன. இந்நிலையில் கடந்த மாதம் வெளியான பிளாக் பேந்தர் படம் உலக அளவில் பிரமாண்ட வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. இப்படம் இதுவரை ரூ.7,152 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. மேலும் தொடர்ந்து ஐந்து வாரங்களாக வசூலில் முதல் இடத்தில் இருந்து வருகிறது. இதன் மூலம் 2009ல் வெளியான அவதார் படத்தின் சாதனையை சமன் செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் பட அதிபர்கள் ஸ்டிரைக்கால் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் ‘பிளாக் பேந்தர்’ படம் தொடர்ந்து திரையிடப்பட்டு வருவதால் இங்கும் இப்படம் நல்ல வசூலை பார்த்து வருகிறது.