
சுந்தர்.சி மற்றும் வடிவேலு கூட்டணியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு உருவாகியுள்ள படம் ‘கேங்கர்ஸ்’. இப்படத்தை சுந்தர்.சி இயக்கி வடிவேலுவுடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சுந்தர் சியின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனம் இணைந்து வழங்குகிறது. இப்படத்தில் கேத்ரின் தெரசா கதாநாயகியாக நடித்திருக்க முனீஷ்காந்த், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சத்யா இசையமைத்திருக்கிறார்.
இப்படம் வருகிற 24ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனையொட்டி படத்தின் இயக்குநர் சுந்தர் சி மற்றும் நாயகி கேத்ரின் தெரசா ஆகியோரை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். அப்போது படம் தவிர்த்து பல்வேறு கேள்விகளுக்கு இரண்டு பேரும் பதிலளித்தனர். இதில் கேத்ரின் தெரசாவிடம் வெற்றி தோல்வி இரண்டையும் எப்படி கையாள்கிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த கேத்ரின் தெரசா, “இரண்டுமே கணிக்க முடியாதது. எந்த இடத்தில் வரும் என தெரியாது. அதனால் வெற்றி, தோல்வி இரண்டிற்கும் பழக வேண்டும். அப்படி பழகவில்லை என்றால் அது அதிக மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும். இது நிரந்தர வேலை கிடையாது. அடுத்த சம்பளம் எப்போது வரும் என சொல்ல முடியாது. நிறைய விஷயங்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். வெற்றியோ தோல்வியோ அதை அதிக எமோஷ்னலாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இரண்டுமே வாழ்க்கையில் வந்து போகுபவை தான். அதனால் முன்னேறிப் போக நான் எந்தளவு உழைக்க வேண்டுமோ அதை கடுமையாக செய்ய வேண்டும்” என்றார்.