கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான எக்ஸ்பிரஸ்: தி எர்னீ டேவிஸ் ஸ்டோரி என்னும் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிகராக அறிமுகமானவர் சாட்விக் போஸ்மேன். இதனை தொடர்ந்து அவர் நடித்த 42 என்னும் படம் நல்ல வரவேற்பை பெற, 2016ஆம் ஆண்டு சிவில் வார் என்னும் படத்தில் ப்ளாக் பேந்தராக நடித்து உலகம் முழுவதும் புகழ் பெற்றார்.
இதனால் அவரை மட்டும் சோலோவாக வைத்து ப்ளாக் பேந்தர் படத்தை 2017ஆம் ஆண்டு ரிலீஸ் செய்து வசூல் சாதனை படைத்தது. இதனிடையே கடந்த 2016ஆம் ஆண்டு போஸ்மேனுக்கு பெருங்குடல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக கடந்த நான்கு ஆண்டுகளாக சிகிச்சை மேற்கொண்டு வந்தார் போஸ்மேன். ஆனால் தனக்கு புற்றுநோய் இருப்பது குறித்து வெளி உலகத்துக்கு அவர் அறிவிக்கவில்லை. சிகிச்சையின் நடுவே திரைப்படங்களிலும் நடித்து வந்துள்ளார்.
இந்நிலையில் புற்றுநோய் தீவிரமடைந்ததையடுத்து நேற்று (28.08.20) சாட்விக் போஸ்மேன் உயிரிழந்தார். இதனை அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். அவருடைய மறைவுக்கு உலகம் முழுவதுமுள்ள ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.