பிரம்மாண்ட இயக்குனர் ராஜ மௌலியின் அடுத்த படம் 'ஆர்.ஆர்.ஆர்'. ஒருங்கிணைந்த ஆந்திராவை சேர்ந்த இரு புரட்சியாளர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, இப்படம் எடுக்கப்படுகிறது. இப்படத்தில் ராம் சரண் அல்லூரி சீதாராம ராஜுவாகவும், ஜூனியர் என்.டி.ஆர் கொமரம் பீமாகாவும் நடித்துள்ளனர். இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர். நடித்துள்ள கதாபாத்திரத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
கொமரம் பீம், பழங்குடி இன மக்களின் தலைவர். நீர், நிலம், காடு ஆகியவை பழங்குடியினரின் உரிமை என முழங்கியவர். பழங்குடிகளின் உரிமைக்காக நிலப் பிரபுக்களையும், நிஜாம் ஆட்சியாளர்களையும் எதிர்த்துக் கொரில்லா முறையில் போரிட்டவர். ஆனால், 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் கொமரம் பீம் கதாபாத்திரத்தில் வரும் என்.டி.ஆர்., இஸ்லாமியர் போல குல்லா அணிந்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியது. இதற்குப் பழங்குடியின மக்களிடையே எதிர்ப்பு கிளம்பியது. கொமரம் பீமின் பேரனும் எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமில்லாமல், அந்தக் காட்சியை நீக்க வேண்டும் எனவும் ராஜமௌலியைக் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அதிலாபாத் பா.ஜ.க எம்.பியான சோயம் பாபுராவ், கொமரம் பீம் நிஜாம்களை எதிர்த்து போராடியவர். அவர் குல்லா அணிந்திருப்பதுபோல், காட்சி அமைப்பது பழங்குடியின மக்களை அவமதிப்பது போன்றது. அந்த காட்சியைப் படத்திலிருந்து நீக்க வேண்டும். இல்லையென்றால், படம் வெளியாகும் தியேட்டர்கள் கொளுத்தப்படும் என ராஜமௌலியை எச்சரித்திருந்தார்.
இந்தநிலையில் தெலுங்கானா பாஜக தலைவரும், கரீம்நகர் எம்.பியுமான பந்தி சஞ்சய் குமார், கொமரம் பீம் குல்லா அணிந்திருப்பது போன்ற காட்சிகளை நீக்காவிட்டால், ராஜமௌலியை தடிகளால் தாக்குவோம் எனவும், படம் திரையிடப்படும் அணைத்து திரையரங்குகளையும் கொளுத்துவோம் என மிரட்டல் விடுத்துள்ளார். ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில் அவர், "பரபரப்பு வேண்டுமென்பதற்காக ராஜமௌலி, கொமரம் பீம் குல்லா அணிந்திருப்பது போல் காட்டினால் நங்கள் அமைதியாக இருப்போமா? ஒரு போதும் மாட்டோம்" என கூறியுள்ள அவர் "நீங்கள் (ராஜமௌலி) கொமரம் பீமையும், பழங்குடின மக்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் தாழ்த்தி படமெடுத்தால், நாங்கள் உங்களை தடிகளால் தாக்கி காயப்படுத்தவோம். படத்தை திரையிடும் திரையரங்குகளைக் கொளுத்துவோம்" என ராஜமௌலிக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.