தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாக்களில் நடித்து வரும் சாய் பல்லவி தற்போது தெலுங்கில் ராணாவுடன் இணைந்து விராட பருவம் படத்தில் நடித்துள்ளார். சாய் பல்லவி நக்சலைட்டாக நடித்துள்ள இப்படம் வரும் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனைத்தொடர்ந்து படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் சாய் பல்லவி மற்றும் படக்குழு இறங்கியுள்ளன.
அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சாய் பல்லவி "சமீபத்தில் வெளியான காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தில் காஷ்மீர் பண்டிட்டுகள் கொலை செய்யப்படுவதாகக் காட்டியிருப்பார்கள். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் காஷ்மீரில், காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்படுவதும், கரோனா காலத்தில் மாடுகளை ஏற்றிச் சென்ற இஸ்லாமியர்களை வழிமறித்து அவர்களை ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லச் சொல்லித் தாக்குதல் நடத்திக் கொல்வதும் ஒன்றுதான். இரண்டுமே தவறுதான்" என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்துக்கு ஒரு சிலர் ஆதரவும், ஒரு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை சாய் பல்லவியின் கருத்திற்கு நடிகையும், பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினருமான விஜயசாந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "பசுக்கள் கொல்லப்படுவதை கேள்வி எழுப்புவதும், காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்படுவதும் ஒன்றல்ல. நீங்கள் சற்று சிந்தித்து பார்த்தால் தெய்வீக பசுக்களை காப்பாற்ற பசுக்காவலர்கள் நடத்தும் போராட்டம் புரியும். ஒரு தாய் தன் மகனை தவறு செய்வதற்காக அடிப்பதும், திருடனை திருடியதற்காக அடிப்பதும் ஒன்றா? ஒரு பிரச்சனை குறித்து முழுவதும் தெரிந்தால் மட்டுமே கருத்து சொல்லுங்கள். இல்லையென்றால் தள்ளி நிற்பதே சிறந்தது. பிரபலமாக இருக்கும் போது நாம் கூறும் ஒவ்வொரு வார்த்தைகளும் ஏராளமானவர்களிடம் சென்றடையும். அதனால் சமூக உணர்வுடன் பதிலளிப்பது அவசியம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.