பிரபல பாடகியும் இசைஞானி இளையராஜாவின் மகளுமான பவதாரிணி கடந்த சில மாதங்களாகப் புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் தொடர் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், இலங்கையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி ஜனவரி 25 ஆம் தேதி மாலை உயிரிழந்துள்ளார். இந்தச் செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்த இளையராஜா குடும்பத்தார் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
விமானம் மூலம் சென்னைக்கு வரவழைக்கப்பட்ட பவதாரிணியின் உடல், தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் திரைப் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து இளையராஜாவின் சொந்த ஊரான தேனிக்கு பவதாரிணியின் உடல், நேற்று இரவு சாலை மார்க்கமாக எடுத்துச் செல்லப்பட்டது. பண்ணைபுரம் கிராமத்தில், இளையராஜா பண்ணை வீட்டில் தாயார் சமாதிக்கு அருகே பாடகி பவதாரிணி உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இதனிடையே பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பவதாரிணி உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் பாரதிராஜா, பவதாரிணி உடலுக்கு மாலை அணிவித்து கதறி அழுது அஞ்சலி செலுத்தினார். ஏற்கனவே எக்ஸ் தளத்தில், “என் நண்பனுக்கு எப்படி ஆறுதல் சொல்வேன். மகள் பவதாரிணியின் மறைவு எங்கள் குடும்பத்தினருக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்” எனக் குறிப்பிட்டிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.