Skip to main content

“சமூக சேவைக்காக சினிமாவை தேர்ந்தெடுத்து இருக்கிறார்” - பாக்யராஜ்

Published on 07/10/2024 | Edited on 07/10/2024
bhagyaraj speech at Aalan Audio Launch

3S பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். சிவா எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் படம் 'ஆலன்'. இப்படத்தில் வெற்றி, மதுரா, அனு சித்தாரா, கருணாகரன், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார் விரைவில் வெளியாக இருக்கும் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர் கே. பாக்யராஜ், தயாரிப்பாளர் டி. சிவா, இயக்குநர் கோபிநாத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட தயாரிப்பாளர் டி. சிவா பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் கே. பாக்யராஜ் பேசுகையில், "தயாரிப்பாளரும், இயக்குநருமான சிவாவிற்கு தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். பேரும் புகழும் வேண்டும் என்பதற்காக திரைத்துறைக்கு வருவார்கள் அல்லது சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக வருவார்கள். நானும் பேரும் புகழுக்காக தான் திரைத்துறையில் நுழைந்தேன். அதன் பிறகு சம்பாத்தியம் கிடைத்தது. ஆனால் இந்த இரண்டு விசயத்தை கடந்து வேறு ஒரு விசயம் இருக்கிறது என்பதை சிவா சொல்லும்போது.. மிகவும் நெகிழ்வாக இருந்தது. சமூக சேவைக்காக சினிமாவை தேர்ந்தெடுத்து இருக்கிறார் என்றதும் அவர் மீது எனக்கு மரியாதை வந்தது. 

குடும்ப சூழல் காரணமாக சிங்கப்பூருக்கு சென்று அங்கு சம்பாதித்து, சம்பாதித்த பணத்தை சினிமாவில் முதலீடு செய்து, மேலும் சம்பாதிக்க வேண்டும் என நினைக்காமல்... சினிமாவில் அவர் என்ன சொல்ல வேண்டும் என்று விரும்புகிறாரோ.. அதை ஆத்மார்த்தமாக செய்வதற்காக ஆலன் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். நஷ்டத்தை பற்றியோ அல்லது வேறு எதைப் பற்றியும் கவலைப்படாமல் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். அவருடன் பேசும்போது எழுத்தாளர்களுக்கு சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாட்டில் நிறைய மரியாதை இருக்கிறது. ஆனால் இங்குதான் எழுத்தாளர்களுக்கு உரிய மரியாதை இல்லை என குறிப்பிட்டார். அந்த ஆதங்கத்தின் காரணமாகவே இந்த படத்தின் நாயகன் வெற்றியை ஒரு எழுத்தாளராக நடிக்க வைத்திருக்கிறார்” என்றார்.

சார்ந்த செய்திகள்