கரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் லாக்டவுனில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் சினிமா ஷுட்டிங்கிற்கும், திரையரங்கம் திறக்கவும் அனுமதி மறுக்கப்பட்டே வருகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர் நடப்பு சங்கம் என்று புதிதாக சினிமா தயாரிப்பாளர் சங்கத்தை தொடங்கியுள்ள பாரதிராஜா. முதல்வருக்கு கோரிக்கை வைத்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “தமிழ்நாட்டில் பொதுமுடக்கம் தொடங்கி இன்றோடு 150 நாள்கள் ஆகிவிட்டன. திரையரங்கை மூடியும் படப்பிடிப்புகளை நிறுத்தியும் 150 நாள்கள் ஆகின்றன என்கிற வேதனையை தமிழ் சினிமா முதல்முறையாக இப்போது சந்தித்துள்ளது. 80க்கும் மேற்பட்ட படங்களும் படப்பிடிப்புகளும் தேங்கி நிற்கின்றன.
சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்தது போல திரைப்படப் படப்பிடிப்புகளுக்கும் ஸ்டூடியோ அல்லது வீடுகளுக்குள் அனுமதி அளிக்க வேண்டும். நாளை, நாட்டின் சுதந்திர நாள். அந்நாளன்று தங்களுடைய சுதந்திர தின அறிக்கையில் எங்கள் திரைத்துறை சிக்கல்களுக்கான விடுதலையும் இடம்பெற வேண்டும் என விரும்புகிறோம்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.