செவாலிய சிவாஜி கணேசனின் 93வது (01.10.1928) பிறந்தநாளை சினிமா ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் இமயம் பாரதிராஜா சிவாஜி கணேசன் குறித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “இன்றைய நாள், பொன்னாள். நன்னாள். காரணம்... தாய்த் தமிழகம், தவமிருந்து பெற்றெடுத்த, ஒரு மிகப்பெரிய கலைப் பொக்கிஷத்தின் பிறந்தநாள். 93வது பிறந்தநாள். தமிழை இப்படித்தான் உச்சரிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்தவர் நடிகர் திலகம். பாரதிராஜா என ஒருவன், இன்று உட்கார்ந்து பேசுகிறேன் என்றால் அதற்குக் காரணம் நடிகர்திலகம்.
சிவாஜியின் பேச்சு, அந்த பாவனைகள், இதுதான் என்னை சென்னைக்கு அழைத்து வந்தது. இன்று நான் சாப்பிடுகிற சாப்பாடு நடிகர் திலகத்தினுடைய சாப்பாடு. அத்தகைய கலைப் பொக்கிஷத்தை நினைவுகூரக்கூடிய நாள் இன்று.
தமிழகத்தில் இதுபோல் இன்னொரு கலைஞன் பிறந்துவருவானா என்றெல்லாம் தெரியாது. ’நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்’ என்று சொல்லுவார்கள். அப்படி நல்லதொரு குடும்பம், செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் குடும்பம்தான். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். கமலாம்மா சிவாஜி அவர்களுக்குக் கிடைத்தது அப்படியொரு வரம். அதேபோல், பிரபு, ராம் என அற்புதமான புதல்வர்கள். ஒருகுடும்பம் என்றால், கமலாம்மா குடும்பம் மாதிரி இருக்கவேண்டும் என்று நான் சொல்லுவேன். அத்தகைய நல்ல குடும்பம், இந்த நாட்டுக்கு எடுத்துக்காட்டாக இருந்திருக்கிறார்கள்.
சிவாஜி அவர்கள், மிகப்பெரிய கலைஞன். தமிழில், அப்படியொரு கலைப்பொக்கிஷம் கிடைக்குமா? அவர் ஒரு கலைப்பெட்டகம். அந்த நாளை நினைவுகூர்ந்து, வாழ்த்துகளையும் வணக்கங்களையும் அவருக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.’’ என்று தெரிவித்துள்ளார்.