இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதிராஜா தற்போது பிஸியான நடிகராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். பல படங்களில் வில்லன், முக்கிய கதாபாத்திரம் என்று அசத்திக்கொண்டிருக்கிறார் பாரதிராஜா.
இந்நிலையில் மீண்டும் ஒரு மரியாதை என்றொரு படத்தை பாரதிராஜா பல வருடங்கள் கழித்து இயக்கி, நடித்திருக்கிறார். இந்த படம் குறித்து நமக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், “பாலுமகேந்திரா, பாலச்சந்தர் இவர்களுடலான உங்களுடைய கலந்துரையாடல் எப்படி இருக்கும்? ”என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த பாரதிராஜா, “இது கேட்கும்போதே கஷ்டமாக இருக்கிறது. அவர்களை பின்னோக்கி பார்க்கும்போது, நான் உணர்ச்சி வசப்படுகிறேன். அவர்களெல்லாம் போய்விட்டார்கள் என்று யோசிக்கும்போது கஷ்டமாக இருக்கும். அடுத்தது நானாக இருப்பேன்.
பாலுமகேந்திரா என்னுடைய நண்பன் ‘பாலு’ என்று நான் அழைப்பேன், ‘பாரதி’ என்று அழைப்பார். என்னை தமிழ் சினிமா துறையில் பாரதி என்று அழைப்பவர்கள் பாலச்சந்தர், பாலுமகேந்திரா, செல்வராஜ் என்ற எழுத்தாளர் இவர்கள்தான். மற்றவர்களெல்லாம் இயக்குனர் சார் என்பார்கள் இல்லையென்றால் அப்பா என்று அழைப்பார்கள்.
நானும் பாலு சாரும் ரொம்ப காமெடியா பேசிப்போம், நீங்கள் முதலில் போவீர்களா? இல்லை நான் போவேனா பாரதி என்று கேட்பார். அதற்கு நான், நம்ப இருவரில் யார் முதலில் போவார்கள் என்று தெரியாது. நீங்கள் முதலில் போனால் ஈமைச் சடங்கிற்கு கண்டிப்பாக வருவேன். உங்களுடைய சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் வித்தியாசப்படும், அதற்கு உள்ளே அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், நான் உங்களை கண்டிப்பாக தோளில் சுமப்பேன் என்று சொன்னேன்.
அவர் உடல்நிலை சரியில்லாதபோது அவரை சந்தித்துவிட்டு இறைவனை பார்த்து அவர் உயிருடன் இருந்துவிட வேண்டும் என்று மனதிற்குள் வேண்டிக்கொண்டேன். அந்த சமயம் பார்த்து நான் கொழும்பு வரை சென்றிருந்தேன். அவர் இறந்துவிட்டார் என்று செய்தி வந்தவுடன் எப்படியோ விமானத்தை பிடித்து, இங்கு வந்துவிட்டேன். பெசன் நகருக்கு எடுத்து சென்றுவிட்டார்கள் என்று சொன்னார்கள். எப்படியோ தோளில் ஒரு முறை சுமந்து, அவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிவிட்டேன்” என்றார்.