இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதிராஜா தற்போது பிஸியான நடிகராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். பல படங்களில் வில்லன், முக்கிய கதாபாத்திரம் என்று அசத்திக்கொண்டிருக்கிறார் பாரதிராஜா.
இந்நிலையில் மீண்டும் ஒரு மரியாதை என்றொரு படத்தை பாரதிராஜா பல வருடங்கள் கழித்து இயக்கி, நடித்திருக்கிறார். இந்த படம் குறித்து நமக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், பதினாறு வயதினிலே படம் தொடங்கி தற்போதுவரை நீண்ட காலமாக சினிமாவில் உழைத்துக்கொண்டே இருக்கிறீர்கள், இன்னும் நீங்கள் திருப்தி அடையவில்லையா, ஓய்வு எடுக்கவில்லையா? என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்தவர், “நான் என்ன இளைஞர்களுக்கு வழிவிடாமல், வேலி போட்டுக்கொண்டா இருக்கிறேன். எந்த வயதிலும் மூச்சை விட்டுவிடாதே என்பதற்கு முன் உதாரணமாக நான் இறுக்கின்றேன். சினிமாவை சுவாசித்துக்கொண்டே இரு, ஒருமுறை போதும் என்று விட்டுவிட்டால் அவ்வளவுதான். நான் ஏன் என்னுடைய மூச்சை நிறுத்துக்கொள்ள வேண்டும்? என்னுடைய மூச்சு சினிமா, நான் சாகும்வரை ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். இதை பாடமாக எடுத்துக்கொண்டு, இளைஞர்களும் ஓடிக்கொண்டே இருங்கள். என்னை ஏன் ரிட்டையர்டாக சொல்கிறாய், உன்னை யார் அப்படி என்னிடம் கேட்க சொன்னது. கலைஞனுக்கு எப்போதும் ஓய்வே இல்லை. நியாயமாக பார்த்தால் நாட்டை ஆளும் ஜனாதிபதிக்கு வயது வரம்பு இருக்க வேண்டும் . கிழட்டு மனிதர்களை கொண்டுபோய் அங்கு வைத்து நாட்டை ஆள விடுகிறார்கள்.
ஓட்டுப்போடுவதற்கு ஒரு வயது இருக்கிறது, அதேபோல அரசு வேலையில் 58 வயதில் ஓய்வு தரப்படுகிறது. அதற்கு காரணம், அந்த வயதிற்கு மேல் நியாபக சக்தி இருக்காது. அப்படி பார்த்தால் இந்த நாட்டையே ஆளுகின்ற பிரஸிடெண்டிற்கு மட்டும் ஏஜ் லிமிட் இல்லை?. ஒரு கலைஞனுக்கு பேஸன் வேண்டும், நல்லா சம்பாதித்த பிறகு கடை போட்டோ அல்லது நிலம் வாங்கி பிழைத்துக்கொள்ளலாம் என்று யோசிக்க கூடாது.
நான் எப்போதும், என்னுடைய கடைசி மூச்சு நான் கேமராவில் உட்காரும்போதே போய்விட்டால் சந்தோஷம் என சொல்வேன். வீட்டில் உட்கார்ந்துகொண்டு இருக்கும்போது போய்விட கூடாது. தொழில் பண்ணும்போது போய்விடு, வீட்டில் அமர்ந்திருந்தால் வேஸ்ட். ஏன் நீங்கள் என்னை இங்கு வந்து நேர்காணல் எடுக்கின்றீர்கள். நான் இன்னும் உயிருடன் இருப்பதால்தான். என்றைக்கு இந்த லைட் என்னை தொடவில்லையோ, என்றைக்கு என்னை கேமரா தொடவில்லையோ, என்றைக்கு நேர்காணலை நிறுத்துகிறீர்களோ அன்றைக்கு என்னுடைய இறந்த நாளாக இருக்கும். நான் ஆக்டிவ்வாக இருப்பதால் நீங்கள் என்னை நேர்காணல் எடுக்க வந்திருக்கிறீர்கள். அதனால் நான் ஆக்டிவ்வாகதான் இருக்க வேண்டும்” என்றார்.