ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு 2014 ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில், திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ. 300 கோடிக்கு மேல் முறைகேடு செய்ததாகப் புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சியைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சந்திரபாபு நாயுடு கைதைத் தொடர்ந்து ஆந்திரா மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில் ஆந்திர சட்டப்பேரவை மழைக்கால கூட்டத் தொடர் இன்று கூடியது. கேள்வி நேரம் நடைபெற்ற போது சபாநாயகர் இருக்கையை நோக்கிச் சென்ற தெலுங்கு தேச கட்சியினர் சபாநாயகரைச் சூழ்ந்து கொண்டு சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
அப்போது நடிகரும் அக்கட்சியின் எம்.எல்.ஏ-வுமான பாலகிருஷ்ணா மீசையை முறுக்கித் தொடையைத் தட்டி தனது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார். உடனே சபையில் இருந்த அமைச்சர் ராம்பாபு, "சினிமாவில் வேண்டுமானால் பாலகிருஷ்ணா மீசையை முறுக்கட்டும். இங்கே வேண்டாம்" எனக் குரல் எழுப்பினார். பின்பு அங்கே இரு தரப்பும் கூச்சலிட்டதால், நீண்ட நேரம் பெரும் அமளி ஏற்பட்டது. இதனால் சட்டசபையே பரபரப்பாகக் காணப்பட்டது.