குட் நைட் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு சந்திப்பினை படக்குழு ஏற்பாடு செய்திருந்தது. அதில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
இயக்குநர் பாலாஜி சக்திவேல் பேசுகையில், ''இயக்குநர் என்னை சந்தித்து முழு திரைக்கதையை வாசிக்க கொடுத்தார். தாளில் எழுதிய திரைக்கதையை வெண் திரையில் காட்சி மொழிகளாகவும், பின்னணி இசை ஊடாகவும், ரசிகர்களுடன் எளிதாக தொடர்பு கொள்ளும் வகையிலும், படத்தை உருவாக்குவது தான் கடினம். இதனை இயக்குநர் விநாயக் எளிதாக கையாண்டிருக்கிறார். குறட்டை எனும் விசயத்தை பொழுது போக்கு அம்சங்களுடன் சொல்ல இயலும் என இளைஞர் பட்டாளம் விவரித்த கதையை நம்பி முதலீடு செய்து தயாரித்த தயாரிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நாயகனான மணிகண்டன் மிக துல்லியமான நடிப்பை வழங்குபவர். படப்பிடிப்பு தளத்தில் அவரின் நடிப்பை கண்டு வியந்திருக்கிறேன். இந்தி திரை உலகில் நவாசுதீன் சித்திக் என்ற திறமையான கலைஞர் இருக்கிறார். அவரைப் போன்ற திறமையான நடிகர் தான் மணிகண்டன்" என்றார்.