சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய், மீனாக்ஷி கோவிந்தராஜன், காளி வெங்கட், பாலா சரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான 'வீரபாண்டியபுரம்' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இந்த நிலையில், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் பாலாசரவணனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்த சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிய பாலா சரவணன் நடிகர் சிம்பு குறித்து பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
"ஷூட்டிங் ஸ்பாட்டில் நிறைய விஷயங்கள் பற்றி சிம்பு பேசுவார். அவர் ஒரு புத்தகம் மாதிரி. அரசியல், சினிமா, ஜாலியான அரட்டை பேச்சு என என்ன பேசினாலும் விரிவாக பேசுவார். அவர்கூட இருக்கும்போது நமக்கு பொழுதுபோவதே தெரியாது. தீவிரமாக டயட்டை பின்பற்றக்கூடியவர். காலை 3 மணிக்கே எழுந்து தியானம் செய்ய ஆரம்பித்துவிடுவார். டயட்டில் இருக்கிறோம் என்று விலையுயர்ந்த உணவுகளை எல்லாம் சாப்பிடமாட்டார். நம் மண்ணில் என்ன கிடைக்குமோ அதைத்தான் சாப்பிடுவார்.
நான் உடம்பை குறைத்ததற்கே அவர்தான் இன்ஸ்பிரேஷன். டான் படத்திற்காக நான் உடம்பை கொஞ்சம் குறைக்க வேண்டியிருக்கு என்று அவரிடம் சொன்னபோது, நிறைய டிப்ஸ் கொடுத்தார். இதைச் சாப்பிடு, அதைச் சாப்பிடு என்றெல்லாம் கூறாமல் மனதை கட்டுப்பாடாக எப்படி வைத்திருப்பது என்று சொன்னார். டயட்டில் இருக்கும்போது வரும் பசியை வெறுப்பாக உணராமல் அதை மகிழ்ச்சியோடு அனுபவியுங்கள் என்றார். அதைப் பின்பற்றித்தான் என்னுடைய உடம்பை நான் குறைத்தேன்". இவ்வாறு பாலாசரவணன் கூறினார்.