
'இன்று நேற்று நாளை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் ரவிக்குமார். இவர், நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து 'அயலான்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பணப்பிரச்சனை காரணமாக, பாதியில் முடங்கிய இப்படத்தின் பணிகள், கரோனா நெருக்கடிநிலை காரணமாக நீண்ட நாட்களாகவே கிடப்பில் இருந்தது. பின் மீண்டும் படப்பிடிப்பைத் துவங்கிய படக்குழு, படத்தின் மொத்தப் படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ளது. படத்தில் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் சார்ந்த காட்சிகள் நிறைய உள்ளதால், படப்பிடிப்பு நாட்களுக்கு இணையான நாட்கள் படத்தின் சி.ஜி. பணிகளுக்குத் தேவைப்படுகிறது. எனவே, படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டாலும், இந்தாண்டு இறுதியில்தான், 'அயலான்' திரைப்படம் வெளியாக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் வரும் 17-ஆம் தேதி தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை வெளியிட படக்குழுத் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு நேற்று (15.02.2021) வெளியான நிலையில், இப்பாடல் குறித்த கூடுதல் தகவலைப் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ள ‘வேற லெவல் சகோ’ எனத் தொடங்கும் பாடல் நாளை வெளியாக உள்ளது.