Skip to main content

'ரெடி...' - ரூ.1000 கோடி கிளப்பில் முதல் தமிழ் இயக்குநராக அட்லீ

Published on 21/09/2023 | Edited on 21/09/2023

 

atlee joins first tamil director in 1000 crore club

 

இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக பணிபுரிந்து இன்று ஷங்கரே பெருமைப்படும் அளவிற்கு உயர்ந்துள்ளார் இயக்குநர் அட்லீ. முதல் படமான ராஜா ராணி படத்தில் அன்றைய காலகட்டத்தில் இளம் வயதிலே இயக்குநராக களம் இறங்கினார். அந்த பட ப்ரோமோஷனுக்காக உண்மையிலே ஒரு தனியார் தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவில் ஆர்யாவுக்கும் நயன்தாராவுக்கும் திருமணம் நடந்து விட்டதோ என பேச ஆரம்பித்துவிட்டனர். வித்தியாசமான ப்ரோமோஷனால் படத்தின் இயக்குநர் யார் என பலராலும் கவனம் பெற்றார். பின்பு படம் வெளியானது, ரசிகர்கள் நல்ல வரவேற்பை அளித்தனர். வெற்றி களிப்பில் பல பேட்டிகளில் பேசிய அட்லீ தான் ஒரு விஜய் ரசிகர் என சொல்லி கொண்டே இருந்தார். 

 

அட்லீ கூறியது, விஜய் காதுக்கு கேட்டுவிட்டது போல. உடனே இரண்டாவது படமாக விஜய்யுடன் கை கோர்த்தார். அப்போது நண்பன் படத்திற்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. பின்பு ஷங்கருடன் பணியாற்றிய அட்லீயுடன் விஜய் கைகோர்க்கவுள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில் ஷங்கரின் எதிர்பார்ப்பை அட்லீ பூர்த்தி செய்வாரா என கேள்விகள் இருந்தது. (நண்பன் படத்தில் 'அஸ்கு லஸ்கா...' பாடலில் கிளாப் போர்ட் அடிக்கும் உதவியாளராக அட்லீ வருவார் என்பது குறிப்பிடத்தக்கது) 

 

ரசிகர்களின் அந்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் தெறி படம் அமைந்தது. விஜய் ரசிகர்களால் படம் கொண்டாடப்பட்டது. குறிப்பாக ஜித்து ஜில்லாடி பாடல்... ஷங்கர் பட அளவிற்கு பிரம்மாண்டம் என குருவிடம் கற்ற வித்தைகளை ஆங்காகே தெளித்திருப்பதாக சொல்லப்பட்டது. இயக்குநராக நல்ல பெயர் பெற்றவுடன் அடுத்ததாக தயாரிப்பாளராக களம் இறங்கினார். 'ஏ ஃபார் ஆப்பிள் ப்ரொடக்ஷன்' (A for Apple Production) என்ற நிறுவனத்தை தொடங்கி முதல் படமாக அவருடைய முதல் படத்தில் இன்னொரு தயாரிப்பு நிறுவனமாக இருந்த ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸுடன்  இணைந்து ஜீவா நடித்த 'சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்தை தயாரித்திருந்தார். அந்த படம் வெளியான காலகட்டத்தில் பேய் ஜானர் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்து கொண்டிருந்த நிலையில் அந்த படம் போதிய வரவேற்பு இல்லாமல் கதவை சாத்தி கொண்டது. 

 

இதனிடையே மீண்டும் விஜய்யுடன் பணியாற்றும் வாய்ப்பு அட்லீக்கு கிடைத்தது. இந்த முறை பெரிய பட்ஜெட், பெரிய ஸ்டார்கள். விஜய்யோடு எஸ்.ஜே.சூர்யா, சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு மற்றும் ஏ.ஆர் ரஹ்மான் என பெரிய பட்டாளமே இணைந்தது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை 2 மடங்கு அதிகரிக்க செய்தது. காரணம் போஸ்டரில் ஜல்லிக்கட்டு மாடு இருந்தது. அந்த சமயத்தில் தான் ஜல்லிக்கட்டு விவகாரம் பூகம்பமாக வெடித்து, உலகையே திருப்பி பார்க்க வைத்த போராட்டம் தமிழ்நாட்டில் அரங்கேறியது. அவர்களை ஈர்க்கும் வகையில் படத்தில் இடம்பெற்ற 'ஆளப்போறான் தமிழன்..' பாடல் அமைந்தது. அதுவே ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு கூடிய கூட்டத்தை திரையரங்கிற்கு அழைத்து சென்றது. அதில் வரும் 'அன்பைக் கொட்டி எங்கமொழி அடித்தளம் போட்டோம்...' என்று வரும் வரிகள் திரையரங்கில் ஸ்பீக்கரை விட ரசிகர்களின் சத்தம் தெறித்தது. இந்த படம் மூலம் எங்க அண்ணனுக்கு நான் தான்டா செய்வேன் என அட்லீ விஜய் ரசிகர்களுக்கு தீனி போட்டிருந்தார். 

 

அந்த தீனி போட்ட கையோடு மீண்டும் அடுத்த படத்திற்காக விஜய்யோடு கை கோர்த்தார் அட்லீ. இம்முறை மாஸ் கமர்ஷியல் படமாக இல்லாமல் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து ஒரு வித்தியாசமான கதைக்களமாக இருக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் அதிலும் ஆங்காங்கே விஜய் ரசிகர்களுக்கு விசிலடிக்கும் விதமாக 'பிகில்' படம் அமைந்தது. இவர் இயக்கிய படங்களில் பழைய கதைகளின் சாயல் அப்படியே இருப்பதாக குற்றச்சாட்டுகள் வந்து கொண்டே இருக்கிறது. அது ரசிகர்களை தாண்டி படத்திலும் வசனமாக இருந்தது. கவுதம் கார்த்திக் நடித்த 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் 'மௌன ராகத்தை ராஜா ராணியாகவும், சத்ரியன் படத்தை தெறி என்றும் எடுத்து போல உள்ளது என அவரை கிண்டலடிக்கும் வசனமும் இடம் பெற்றது. 

 

இப்படி தொடர் கிண்டல்கள் இவரை சுற்றி இருக்க, அதையெல்லாம் அவர் கண்டுகொள்ளாமல் அடுத்ததாக அர்ஜுன் தாஸ் நடித்த 'அந்தகாரம்' மூலம் மீண்டும் தயாரிப்பு பக்கம் வந்தார். படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதன் பிறகு பெரிய ஜாக்பாட் ஒன்று கிடைத்தது அட்லீக்கு. கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டிற்கு. அதுவும் உலக அளவில் மார்க்கெட் வைத்திருக்கும் ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பு. அதனை நழுவ விடுவாரா அட்லீ. அவருடன் சந்திப்பு மேற்கொண்டு ஜவான் படத்தை உருவாக்கினார். அவர் போனது மட்டுமல்லாமல் தமிழ் கலைஞர்களையும் கையோடு அழைத்து சென்றுள்ளார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி வசூலில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட ரூ.1000 கோடியை நெருங்கவுள்ளது. நேற்று வரை ரூ.907 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்த நிலையில், இன்று அல்லது நாளை அதை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 1000 கோடி வசூலித்த முதல் தமிழ் இயக்குநர் என்ற பெருமையைப் பெறவுள்ளார் அட்லீ. இளம் வயதில் இவ்ளோ பெரிய உயரத்தை எட்டியுள்ள அட்லீ இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு திரை  பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்