
தெலுங்கு சினிமாவில் சமீப காலமாக ஹிட்டடித்துள்ள சில குத்து பாடல்கள், வினோதமான நடன அசைவுகளை கொண்டு இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தது. மேலும் அது ட்ரோல் மெட்டிரீயலாக மாறியது. இந்த பட்டியலில் ரவி தேஜா - பாக்யஸ்ரீ நடிப்பில் மிஸ்டர் பச்சன் படத்தில் இடம்பெற்ற ‘சிதார்’ பாடல், அல்லு அர்ஜூன் - ராஷ்மிகா நடிப்பில் புஷ்பா 2 படத்தில் இடம்பெற்ற ‘பீலிங்க்ஸ்’ பாடல், பாலகிருஷ்ணா - ஊர்வசி ரவுதெலா நடிப்பில் ‘தாகு மஹாராஜ்’ படத்தில் இடம்பெற்ற ‘டாபிடி டிபிடி’ பாடல் இருக்கிறது. இந்த பாடல்களை தொடர்ந்து தற்போது ‘ராபின்ஹூட்’ பட பாடலும் புதிதாக இணைந்துள்ளது.
ராபின்ஹூட் படம் வருகிற 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான ‘அதி தா சர்ப்ரிசு’ பாடலில் கேதிகா சர்மா நடனமாடிய அசைவுகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இப்படி தொடர்ந்து வரும் பாடலினால் தற்போது தெலுங்கானா மகளிர் ஆணையம் அப்பாடல் தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மகளிர் ஆணையத்தின் தலைவர் ஷரதா நெரெல்லா வெளியிட்ட அறிவிப்பில், “பெண்களை இழிவுபடுத்தும் அநாகரீகமான நடன அசைவுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இது தொடர்பாக நிறைய புகார்கள் கமிஷனுக்கு வந்துள்ளது. திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடன இயக்குநர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டுமென எச்சரிக்கிறோம்.
இந்த எச்சரிக்கையை ஆலோசிக்கவில்லை என்றால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும். சமூகத்திற்கு நல்ல செய்திகளை வழங்கவும், பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கவும் திரைப்படத் துறைக்கு தார்மீக பொறுப்பு உள்ளது. திரைப்படங்களை இளைஞர்கள் மற்றும் குழந்தைகளும் பார்ப்பார்கள் என்பதை கருத்தில் கொண்டு, திரைப்படத் துறை சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.