அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் நடிப்பில் வருகிற ஜூன் 9 அன்று 'போர் தொழில்' திரைப்படம் வெளிவர இருக்கிறது. இதைத் தொடர்ந்து அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் ஆகியோர் படத்தைப் பற்றிய பல சுவாரசியமான தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்.
அசோக் செல்வன் பேசுகையில், "நான் சிறுவயதில் இருக்கும் போதே போலீஸ் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதை இப்படத்தின் மூலம் தீர்த்துக் கொண்டேன். தமிழ் சினிமாவில் வரும் வழக்கமான போலீஸ் கதாபாத்திரமாக இந்த படத்தில் இருக்காது. ஒரு தனித்துவமான போலீஸாக நடித்து இருக்கிறேன். எல்லோர் வாழ்க்கையிலும் வெற்றி, தோல்வி இருக்கும். அதே போலத் தான் என்னுடைய படங்களிலும் வெற்றி, தோல்விகள் நிறைய இருந்திருக்கிறது. தோல்வியை பார்த்தால் தான் வெற்றியை அனுபவிக்கும் போது அலாதியான மகிழ்ச்சியைத் தரும்.
வேறு சினிமா துறையில் கதைக்கான நடிகர்களைத் தேடுவார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் மட்டும் தான் ஹீரோவின் முந்தைய படம் வெற்றி அடைந்ததா என்று தான் அடுத்த பட வாய்ப்பை தருகிறார்கள். அதனால் நல்ல படங்களை தருவதில் தான் எனக்கு பயம் இருக்கிறது. அதே சமயம் அது தான் எனது உத்வேகமும். மேலும், நல்ல படங்களை தருவதில் நான் கவனமாக இருக்கிறேன். 10 வருடங்களுக்கு பின்பும் என்னுடைய படங்கள் மக்களுக்கு பிடிக்கும் வகையில் இருக்க வேண்டும். வருகிற ஜூன் 9 ஆம் தேதி அன்று வெளியாக இருக்கும் போர் தொழில் படத்தை அனைவரும் திரையரங்கில் வந்து பார்க்க வேண்டும். படம் பார்த்த விமர்சகர்கள் யாரும் அந்த படத்தின் விமர்சனத்தை தாண்டி படக் கதையை மக்களுக்கு கூற வேண்டாம். ஏனென்றால் இந்த படம் ஒரு சஸ்பன்ஸ் திரில்லர் படமாகும். இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்" என்று கூறினார்.