'நீலம் புரொடக்ஷன்ஸ்' சார்பாக பா. ரஞ்சித் தயாரிப்பில் ஜெய்குமார் இயக்கத்தில் ஷாந்தனு, அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'ப்ளூ ஸ்டார்'. கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவான இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். கடந்த 25 ஆம் தேதி வெளியான இப்படம் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது. இப்படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்ற நிலையில், பா. ரஞ்சித், அசோக் செல்வன், ஷாந்தனு, கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர்.
அதில் அசோக் செல்வன் பேசுகையில், “இந்த படம் மாதிரியான படங்கள் நடிக்கதான் சினிமாவுக்குள் வந்தேன். ஒரு படம் வெறும் வெற்றிப் படமாக இல்லாமல், எதாவது ஒரு கருத்தை முன்வைக்க வேண்டும். இந்த படத்தை அரசியல் படமா என்று கேட்டால் இல்லைன்னுதான் சொல்வேன். எல்லாரும் சேர்ந்து ஒன்னா வாழுறது என்பது அரசியல்னா அது என்னது. எனக்கு புரியல.
ரஞ்சித் ஒரு புரட்சிக்கான அடையாளமாக மாறிவிட்டார். அவருடைய இலக்கு ரொம்ப பெரிசாக இருக்குது. அதனால் அவருடைய உழைப்பை யாரும் பேசமாட்டேங்கிறாங்க. இந்தியாவில் உள்ள சிறந்த இயக்குநர்களில் ஒருவர் ரஞ்சித். கீர்த்தியிடம் நிறைய முறை நம்ம உழைப்ப போட்டு ஒரு படம் பண்றோம். அதுக்கு ஏன் கைதட்ட மாட்டேங்குறாங்ன்னு புலம்பியிருக்கேன். அவளும் சரியாகிவிடும் என சொல்லுவாள்” என்றார். அப்போது மேடையில் அமர்ந்திருந்த கீர்த்தி பாண்டியன் எமோஷ்னலாகி அழுதார்.
தொடர்ந்து பேசிய அசோக் செல்வன், ஷாந்தனுவும், ப்ரித்வியும் அவங்க அப்பா பத்தி பேசியதால், எனக்கும் என் குடும்பதில் யாரையாவது பத்தி பேச தோனுது. என் தாத்தா சொன்னது தான் ஞாபகம் வருது. அவர் ஜேம்ஸ் பாண்ட் ரசிகர். நான் முதல் முறையா தமிழில் டிடெக்டிவ் படம் பண்றேன். அந்த பட ஷூட்டிங் போது இறந்துவிட்டார். இறப்பதற்கு முன்னால், ‘சிவாஜி கணேசன் பேரனும் நடிகன், முத்துராமன் பேரனும் நடிகன், என் பேரனும் நடிகன்’ என அம்மாவிடம் சொல்லியிருக்கார்” என்றார்.