தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யா நடிப்பில் கடைசியாக வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு கிடைத்தது. கடந்த சில படங்களில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை ஈட்ட முடியாமல் தவித்துவந்த ஆர்யாவிற்கு சார்பட்டா பரம்பரை படத்திற்கு கிடைத்த வெற்றி உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. அந்த உற்சாகத்தில் அடுத்தடுத்த படங்களுக்கு கதை கேட்கும் பணியில் ஆர்யா கவனம் செலுத்திவருகிறார். மேலும், அவர் நடிப்பில் உருவாகியுள்ள 'அரண்மனை 3', எனிமி ஆகிய படங்களின் படப்பிடிப்பு நிறைவுபெற்று ரீலீசிற்குத் தயாராகிவருகின்றன.
இதில், விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி திரைப்படம் ஆயுதபூஜை தினமான அக்டோபர் 14ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது கிடைக்கும் தகவலின்படி 'அரண்மனை 3' படத்தையும் அதே தினத்தில் திரைக்கு கொண்டுவரும் யோசனையில் 'அரண்மனை 3' படக்குழு இருப்பதாகக் கூறப்படுகிறது. பண்டிகை தினமான ஆயுதபூஜை தினத்தன்று இரு படங்கள் வெளியாகவுள்ளது ஆர்யா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.