96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மெய்யழகன். சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து அர்விந்த் சுவாமியும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீ திவ்யா கதாநாயகியாக நடித்திருக்க ராஜ்கிரண், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 8ஆம் தேதி கோவையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கார்த்தி, அர்விந்த் சுவாமி, ஸ்ரீ திவ்யா உள்ளிட்ட படக்குழுவினர் பலர் பங்கேற்றனர்.
அப்போது அர்விந்த் சுவாமி பேசுகையில், “இந்த படத்தில் எனது கதாபாத்திரத்தை என்னை மனதில் வைத்துக்கொண்டு எழுதியதற்காக பிரேம் குமாருக்கு நன்றி. இது என் வாழ்க்கையில் நடந்த கதை. என்னை பாதித்த கதை. இப்போதும் பாதிக்கின்ற ஒரு விஷயம். அது பற்றி பட ரிலீசுக்கு பிறகு பேசுகிறேன். கார்த்தியுடன் இந்த படத்தில் நடித்த போது படத்தை தாண்டி, வெளியேயும் நல்ல உறவில் நெருக்கமாகி விட்டோம். அவர் எனக்கு கூட பிறக்காத அண்ணன். அரவிந்த்சாமி மாதிரி மாப்பிள்ளை வேண்டும் என்று பெண்கள் கேட்பதாக சொன்னீர்கள் ஆனால் அப்படி கேட்பவர்களுக்கு என்னைப் பற்றி சரியாக தெரியாது. பட கதாபாத்திரங்களை வைத்து நான் அப்படிதான் இருப்பேன் என நம்பிவிடுகின்றனர். ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை.” என்று கூறினார்.