அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் 'தமிழ் ராக்கர்ஸ்'. ஏ.வி.எம் ப்ரோடக்ஷன்ஸ் மற்றும் சோனி லைவ் இணைந்து தயாரித்துள்ள இந்த வெப்சீரிஸ் ஆகஸ்ட் 19ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், பத்திரிகையாளர்களுக்கான சிறப்புக் காட்சி இன்று திரையிடப்பட்டது.
பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய அருண் விஜய், “பைரசி என்ற விஷயம் இன்றைக்கும் வேறுவேறு வடிவங்களில் உள்ளது. இந்த வெப்சீரிஸ் பார்த்த பிறகு இனி பைரசியில் படம் பார்க்கக்கூடாது என்ற எண்ணம் எல்லோருக்குமே ஆழ்மனதில் ஏற்படும். சினிமா எடுப்பதில் எவ்வளவு கஷ்டங்கள் உள்ளது என்பதையும் இந்த சீரிஸில் காட்டியிருக்கிறோம். இயக்குநர் அறிவழகனுடன் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறேன். இந்த சீரிஸுக்கு என்னிடம் இருந்து என்ன வேண்டும் என்பதை தெளிவாகச் சொல்லி நம்பிக்கை கொடுத்தார். ஏ.வி.எம். மாதிரியான பெரிய பாரம்பரியம் கொண்ட நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியதில் ரொம்பவும் மகிழ்ச்சி. சீரிஸில் சில கற்பனையான விஷயங்களும் உள்ளன” எனத் தெரிவித்தார்.