ஹரி இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், பிரகாஷ் ராஜ், ராதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'யானை' திரைப்படம், ஜூன் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் நாயகன் அருண் விஜய்யை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் யானை படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
”எல்லோருக்கும் பிடித்த படமாக யானை இருக்கும். என்னுடைய முந்தைய படங்களில் இருந்து ரொம்பவும் வேறுபட்ட படமாகவும் இருக்கும். வெறும் கமர்ஷியல் படமாக இல்லாமல் லவ், காமெடி, எமோஷன்ஸ் நிறைந்த படமாக இருக்கும்.
ஹரி சார் கதை சொல்லும்போதே ரவி என்ற கேரக்டர் ரொம்பவும் பிடித்திருந்தது. ரசிகர்கள் மனதில் ஆழமாக பதியக்கூடிய கேரக்டராக ரவி கேரக்டர் இருக்கும். இந்தக் கதையை கேளுங்க அருண், உங்களுக்கு செட்டாகுமானு பாருங்க என்று சொல்லித்தான் ஹரி சார் கதை சொன்னார். கதை பிடித்திருந்ததால் உடனே சம்மதம் சொன்னேன். அப்படித்தான் இந்தப் படம் ஆரம்பித்தது.
மாமா, மச்சான் என்பதைத் தாண்டி, ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் இயக்குநர், நான் நடிகர் என்ற அளவில்தான் எங்கள் உறவு இருக்கும். இயக்குநராக அவர் என்ன எதிர்பார்ப்பாரோ அதைவிட பல மடங்கு உழைப்பைக் கொடுக்க வேண்டும் என்றுதான் நான் விரும்புவேன்.
படத்தில் பெரிய பைட் சீக்குவன்ஸ் இருக்கும். அதை 3 நாளில் எடுக்கனும்னு ப்ளான் பண்ணிருந்தாங்க. ஆனால், ஒரேநாளில் அதை எடுத்தோம். ஆக்ஷன் எனக்கு ரொம்பவும் பிடித்தமான விஷயம் என்பதால் அதைப் பண்ணமுடிந்தது. அதே நேரத்தில், கொஞ்சம் கூடுதலாகவும் மெனக்கெட வேண்டியிருந்தது. அம்மு அபிராமிக்கும் எனக்கும் இருக்கும் சீன்ஸ், எனக்கும் ராதிகா அம்மாவுக்குமான சீன்ஸெல்லாம் ரொம்பவும் சேலஞ்சிங்காக இருந்தது.
பிரியா பவானி சங்கர் ரொம்பவும் டெடிகேட்டடான ஆர்டிஸ்ட். ஏற்கனவே அவருடன் இணைந்து நான் நடித்திருப்பதால் இந்தப் படத்தில் கம்போர்ட்டஃபுலாக இருந்தது. படத்தில் ஒவ்வொரு சீனுமே எங்களுக்கு எக்சைட்டிங்காக இருந்தது. வழக்கமாக ஹரி சார் படங்களில் இருக்கும் டயாலாக்ஸ் இந்தப் படத்திலும் இருக்கும். ஆக்ஷன் மட்டுமில்லாமல் குடும்பங்களின் முக்கியத்துவத்தை சொல்லும் படமாகவும் யானை இருக்கும். படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது எல்லோரும் அதை ஃபீல் பண்ணுவாங்க.
கரோனா லாக்டவுணுக்கு பிறகு மக்கள் தியேட்டர்களுக்கு வருவார்களா என்ற சந்தேகம் இருந்தது. சமீபத்தில் வெளியான நல்ல படங்களுக்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. யானை படத்திற்கும் அது மாதிரியான வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறோம்”.