Skip to main content

"நம்ம ஆளுக என்ன பண்ணாலும் நாம மதிக்கமாட்டோம்" - ஏ.ஆர்.ரஹ்மான் ஆதங்கம் 

Published on 05/04/2019 | Edited on 05/04/2019

மார்வெல் நிறுவனத்தின் புகழ் பெற்ற அவெஞ்சர்ஸ் வரிசையில் அடுத்த பகுதியான 'அவெஞ்சர்ஸ் - எண்ட் கேம்' விரைவில் வெளிவர இருக்கிறது. இப்படத்தின் ஹிந்தி மற்றும் தமிழ் டப்பிங் வடிவங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அவெஞ்சர்ஸ் ஆன்தம் என்ற பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. விழாவில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஆன்ட்ரியா, பாடலை எழுதிய விவேக் உள்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் பேசியது...

 

a.r.rahman avengers



"இப்படத்தின் மூலமாக ஹாலிவுட் படைப்பாளர்களுக்கும் நமக்கும் ஒரு உறவு, ஒரு பாலம் உருவாகியுள்ளது. நான் இசையமைத்துள்ளேன், விஜய் சேதுபதி, ஆன்ட்ரியா குரல் கொடுத்துள்ளனர். இப்படிப்பட்ட கூட்டு முயற்சிகள் சினிமாவில் முக்கியம். இப்படத்தின் இயக்குனர் ஜோ, எனது படத்தை பார்த்தார். அதை தன் ஹாலிவுட் நண்பர்களுக்கு காட்டுவதாகக் கூறியிருக்கிறார். தனது இயக்கத்தில் மேலும் படங்கள் செய்யலாம் என்றும் கூறினார். டிஸ்னீயிலும் புதிய நண்பர்கள் கிடைத்துள்ளனர். இப்படி இந்தப் படம் பல விஷயங்களுக்குத் தொடக்கமாக அமைந்துள்ளது. இந்தப் பாடலைக் கேட்ட டிஸ்னீ நண்பர்கள் பலர் 'கேட்டதும் கண்ல தண்ணி வந்துருச்சு' என்றெல்லாம் சொன்னாங்க. இயக்குனர் ஜோ, "நீ ஒரு பெரிய ஹிட் கொடுத்துட்ட" என்று சொன்னார். இப்படி இந்த இசைக்கு நன்றாக வரவேற்றாங்க".

ஏ.ஆர்.ரஹ்மான் பேசியவுடன், நிகழ்ச்சி தொகுப்பாளர் அவரிடம், "நீங்க சிம்பிளா சொல்லிட்டீங்க, ஆனா இதே அவெஞ்சர்ஸ் வரிசையின் இரண்டாம் பாகத்தில் ஒரு சீக்வன்ஸ்க்கான இசை, எந்திரன் படத்தில் நீங்கள் உருவாக்கிய இசையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது என்று அந்த இசையமைப்பாளரே சொன்னாரே" என்று கேட்க, "ஆம், அது ஒரு நல்ல செய்தி எனக்கு. அங்க இருக்கவங்களுக்கு நம்ம திறமை புரியுது. நம்ம ஆளுங்க என்ன பண்ணாலும் நாம மதிக்கமாட்டோம், கண்டுக்கமாட்டோம். வெளிய இருந்து இப்படி ஒருத்தர் சொல்லும்போதுதான், 'பரவாயில்ல நம்ம ஆளுக்கும் ஏதோ இருக்கு'னு நினைக்கிறாங்க" என்று கூறினார்.

மேலும் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போதும், ஒரு கேள்விக்கு "நண்டு கதை தெரியும்ல? மேலே ஏற விடாமல் இழுத்து விட்டுறும்" என்று ரஹ்மான் குறிப்பிட்டார். தமிழகம், இவரை இசைப்புயல் என்றும் ஆஸ்கர் தமிழன் என்றும் கொண்டாடுகிறது. பாலிவுட்டும் கூட இவரை சொந்தம் கொண்டாடுகிறது. ஆனாலும் திரைத்துறையில் இசைப்புயலுக்கு ஏதோ ஒரு ஆதங்கம் இருக்கிறது போல...                                

 

 

சார்ந்த செய்திகள்