அமிதாப் பச்சன் முதல்முறையாக நேரடி தமிழ்ப்படத்தில் நடிக்கவிருக்கும் தகவல் நேற்று முன்தினம் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆச்சரியத்துக்கு முக்கிய காரணம் அமிதாப் பச்சன் நடிக்கவிருக்கும் படமும் அந்த டீமும்தான். 'மணிரத்னம் அல்லது ஷங்கர் தான் அவரை தமிழ் சினிமாவுக்கு கூட்டிட்டு வருவாங்கன்னு நினைச்சோம். யாருமே எதிர்பார்க்காதமாதிரி இப்படி ஒரு அறிவிப்பு' என்றே பலரும் இதைப் பற்றி எண்ணுகின்றனர். ஆம், 'கள்வனின் காதலி', 'மச்சக்காரன்' ஆகிய படங்களை இயக்கிய தமிழ்வாணன்தான் அமிதாப் பச்சன் நடிக்கும் முதல் தமிழ்ப்படமான 'உயர்ந்த மனிதன்' படத்தை இயக்குகிறார். எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ரஜினிகாந்த் வெளியிட்டார்.
இந்த டீம் எப்படி அமிதாப் பச்சனிடம் கதை சொல்லி ஓகே வாங்கினார்கள் என்பதே பலருக்கும் கேள்வியாக இருந்தது. எஸ்.ஜே.சூர்யா 'குஷி' படத்தை ஹிந்தியில் இயக்கியிருந்தாலும் சமீபத்தில் பாலிவுட்டில் அவர் கவனம் செலுத்தவில்லை. அப்படியிருக்க இந்த டீம் அமிதாப் பச்சனை அணுக உதவியது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்தானாம். 'கஜினி'யில் தொடங்கி 'ஹாலிடே' வரை பாலிவுட்டில் நல்ல பெயர் பெற்றுவிட்ட முருகதாஸ்தான் அமிதாப்புடன் சந்திப்பை சாத்தியமாக்கியதாம். இதற்காக 'எங்களுக்கு உதவியாக இருந்த முருகதாஸுக்கு நன்றி' என்று எஸ்.ஜே.சூர்யா குறிப்பிட்டார்.
'வாலி' வெற்றிக்குப் பிறகு அஜித்துடன் நெருக்கமாக இருந்த எஸ்.ஜே.சூர்யாதான் முருகதாஸை அஜித்துக்கு அறிமுகப்படுத்தி 'தீனா' திரைப்படத்தை அவர் இயக்க வழிவகுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 'தீனா' திரைப்படத்தை இயக்கும்போது முருகதாஸ் மிக இளம் இயக்குனர் ஆவார். அவர் குறித்து அஜித்திற்கு நம்பிக்கை ஏற்படுத்தியவர் எஸ்.ஜே.சூர்யா. இந்த வகையில் அமிதாப்பை அறிமுகம் செய்ததன் மூலம் முருகதாஸ் தன் நன்றிக்கடனை திரும்ப செலுத்தியுள்ளார் என்று விளையாட்டாகக் கூறுகின்றனர் சினிமா பார்வையாளர்கள்.