Skip to main content

கொஞ்சம் சறுக்கிட்டார்... இப்போ சுதாரிச்சுட்டார்... இனி எப்படி இருப்பார் விஜய் தேவரகொண்டா?!

Published on 09/05/2020 | Edited on 09/05/2020

 

vijay devarakonda

 

இன்று பல பெண்களின் வாட்சப் ஸ்டேடஸில் வரிசையாகவும், DPகளில் போஸ் கொடுத்தபடியும், பல ஆண்களின் வசைக்கு ஆளானவராக இருப்பவர் நம்முடைய தெலுங்கானாவின் யங்ஸ்டர், தற்போது தென்னிந்தியாவின் யங் ஐகானாக திகழும் விஜய் தேவரகொண்டா. தொடக்கத்தில் ஆண்களுக்கு மிகவும் பிடித்தமானவராக இருந்த விஜய் தேவரகொண்டா ’அர்ஜூன் ரெட்டி’ படத்தை தொடர்ந்து ஆண்களுக்கு காண்டாகும் நடிகர்களில் ஒருவராக மாறினார் என்றே சொல்லலாம். காரணம், அர்ஜூன் ரெட்டியை அடுத்து அவருக்கு குவிந்த பெண் விசிறிகள் ஏராளம். இப்படி பெண்களின் கனவு கண்ணனாக இருக்கும் விஜய் தேவரகொண்டா தனது 31 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருடைய செல்வாக்கு எப்படி இப்படி தென்னிந்திய ஐகான் என்னும் அளவிற்கு உருமாறியது என்பதை பார்ப்போம்.


அர்ஜுன் ரெட்டி... தமிழ் இளைஞர்கள் வட்டாரத்தில் பிரபலமான பெயர். கிட்டத்தட்ட எல்லா தமிழ் இளைஞர்களும் பார்த்திருக்கும் தெலுங்கு படம். இந்தப் படத்தின் மூலம்தான் விஜய் தேவரகொண்டா தமிழகத்துக்கு அறிமுகம். கட்டுக்கடங்காத தலைமுடி, சுதந்திரத்தை வெளிப்படுத்தும் தாடி என கரடு முரடு ஹீரோவாக கவர்ந்தவர் விஜய். அந்தப் படத்தில் அவரது ஸ்டைல், ராயல் என்ஃபீல்டு பைக், உடை, கூலர்ஸ் என அனைத்தும் தெலுங்கு தேசத்தைத் தாண்டி தென்னிந்தியா முழுவதுமுள்ள இளைஞர்களின் ஸ்டைல் ஸ்டேட்மென்ட் ஆனது. இதற்கு முன் 'ப்ரேமம்' படத்தின் மூலமாக நிவின் பாலிக்கு அந்தப் புகழ் கிடைத்தாலும் அவரது அடுத்தடுத்த படங்கள் வேறு திசையில் சென்றுவிட்டன.

'அர்ஜுன் ரெட்டி' மயக்கம் தெளியும் முன்பே வந்தது 'கீதா கோவிந்தம்'. ரக்கட் (rugged) டாக்டராக இருந்து ஹேண்ட்ஸம் ப்ரொஃபசர் ஆனார் விஜய். 'மேடம், மேடம்' என்று அவர் கெஞ்சியதில் தமிழக இளம் பெண்களும் மனதிறங்கிவிட்டனர். நேரடி தெலுங்கு படமான 'கீதா கோவிந்தம்' சென்னையில் பல வாரங்கள் பலத்த போட்டிகளைத் தாண்டி ஓடியது மிகப்பெரிய வெற்றி. சென்னையைத் தாண்டி பல ஊர்களிலும் திரையரங்குகளில் வெளியானது அதை விட பெரிய வெற்றி. ’கீதா கோவிந்தம்’ படத்துக்கு காலை 8 மணி காட்சி திரையிடப்பட்டதே பெரிய விஷயமாகப் பேசப்பட்டது. சோஷியல் மீடியாவில் வெளிப்பட்டு வந்த விஜய் தேவரகொண்டா ரசிகைகள், சென்னை ரோகிணி திரையரங்கில் நடந்த 'நோட்டா’ காலை 5 மணி காட்சியில் கூடியது பெரிய ஆச்சரியம்.

 

 

vjd


'இன்கேம் இன்கேம்' என்ற அந்த ஒரு பாடலும் அதில் நடித்த விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா ஜோடியும் போதுமானதாக இருந்தது அந்தப் படத்திற்குக் கூட்டத்தை இழுக்க. அந்தப் படத்தின் வெற்றி நேரடியாக விஜய் நடிக்கும் முதல் தமிழ் படமான 'நோட்டா'வுக்கு காலை 5 மணி காட்சியை பெற்றுத் தந்தது. இந்தப் படம் தோல்வியை தழுவினாலும், விஜய் தேவரகொண்டாவுக்கு மாஸ் இறங்கவில்லை என்று சொல்லலாம்.

இதனை அடுத்து பெரும் எதிர்பார்ப்புடன் தென்னிந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு, ’டியர் காம்ரேட்’ படம் வெளியானது. இந்தப் படத்திலும் ராஷ்மிகாவுடன் விஜய் ஜோடியாக நடித்ததால் பல கிசுகிசுக்கள் வெளியானது. இதன்பின் காதல் வாலிபனாக, சாக்லேட் பாயாக நடிக்க மாட்டேன். இதுவரை அந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடித்தது போதும் என்று அதிரடியாக ’டியர் காம்ரேட்’ புரொமோஷன்களில் முழக்கமிட்டார். ஆனால், அந்தப் படம் வெளியான அனைத்து மொழிகளிலும் ஆவ்ரேஜ். திடீரென விஜய் தேவரகொண்டாவின் பட மார்க்கெட் சரியத் தொடங்கியது என்று பேசத் தொடங்கினார்கள். இந்த படத்தை போலவே நான்கு மொழிகளில் ‘வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’ என்று நான்கு ஹீரோயின்களுடன் நடித்தார். இதிலும் சற்று சைக்கோத்தனமான காதல் இளைஞராக கடந்த இரண்டு படங்களில் தோன்றியது போலவே தோன்றினார், அதுவும் நான்கு வெவ்வேறு கதாபாத்திரங்களில்..... ஏமிரா இதி? என்று மீம்ஸ்களில் விஜய் தேவரகொண்டாவை வைத்து செய்ய, இனி இதுபோல் நடைபெறாது  என்று தனது ரசிகர்களுக்கு உறுதியளித்து பூரி ஜகநாத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதன் மூலம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான லவ்வர் பாயாக இருந்து வந்த விஜய், முதல் அதிரடி ஆக்‌ஷன் படத்தில் நடிக்கிறார்.


'அர்ஜூன் ரெட்டி’யை தொடர்ந்து அவர் நடிப்பில் மூன்று படங்களே வெளியாகியிருந்தாலும், அவருடைய  ‘ரௌடி’ கார்மெண்ட்ஸ் கம்பேனி, சர்ச்சையான கருத்துகள், பெண்களை கவரும் ஆக்டிவ் மாடலிங் என்று தன்னை தானே எங்கேஜிங்காக வைத்துக்கொள்வதில் சிம்பு போல வல்லவர் விஜய். சமீபத்தில்கூட விஜய் குறித்து தவறாக செய்தி வெளியிடப்பட்ட விவகாரத்தை மற்ற நடிகர்கள் போல கடந்து செல்லாமல், தைரியமாக வெளிப்படையாக அதுகுறித்து பேசி வீடியோ வெளியிட்டு, பின்னர் தெலுங்கு திரையுலகமே அவருக்கு ஆதரவு தெரிவித்தது அனைவரும் அறிந்ததே. அடுத்து வெளிவரும் பூரி ஜகநாத் படத்தில் அவரது இன்னொரு முகத்தை பார்க்கலாம் என்கிறார்கள் ரசிகர்கள். இப்படி, கொஞ்சம் சறுக்கினாலும் சுதாரித்துக்கொண்டு டோலிவுட்டில் தனக்கு ஒரு உறுதியான இடம் இருக்கிறது என்று நிறுவியிருக்கிறார் விஜய் தேவரகொண்டா.

 

 

சார்ந்த செய்திகள்