அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் படங்களால் எல்லை தாண்டி வந்து ரசிகர்களை கவர்ந்த விஜய் தேவரகொண்டாவின், 'நோட்டா' பெரிதாக ஜெயிக்கவில்லை. படம் தோற்றாலும் விஜய் தேவரகொண்டாவின் 'சார்ம்' குறையாமல்தான் இருந்தது. இப்போது அவரது தெலுங்குப் படமான 'டாக்ஸி வாலா' வெளிவந்துள்ளது. வேலை நாளின் மாலை வேளையில் ஹவுஸ்ஃபுல்லாக இருந்தது அரங்கு. விஜய் தேவரகொண்டாவின் என்ட்ரியின் போது அவரது ரசிகைகளின் குதூகல கூச்சலுடன் படம் பார்க்கத்தொடங்கினோம்.
பட்டப்படிப்பை பல ஆண்டுகளாகப் படித்துமுடித்துவிட்டு தன் மாமாவை நம்பி ஹைதராபாத் வருகிறார் சிவா (விஜய் தேவரகொண்டா). அவரது கார் கேரேஜில் தங்கி பல வேலைகளுக்குச் சென்று பார்த்துவிட்டு எதுவும் அவருக்கு செட் ஆகாமல் சொந்தமாக ஒரு கார் வாங்கி 'ஓலா'வில் வாடகைக்கு ஓட்டலாம் என்று முடிவெடுக்கிறார். பல இடங்களுக்கு அலைந்து பல கார்களைப் பார்த்தபின் இவரைத் தேடி வந்து சேர்கிறது பழைய 'காண்ட்டஸா' கார் ஒன்று. அந்தக் கார் இவருக்கு பணத்தைத் தருகிறது, காதலைத் தருகிறது, கூடவே மிகப்பெரிய பிரச்சனையைத் தருகிறது. ஆம், காரில் ஆவி இருக்கிறது, மன்னிக்கவும் ஆன்மா இருக்கிறது. அது விஜய் தேவரகொண்டாவுக்கு நல்லது செய்கிறதா, தீமை செய்கிறதா, காரை விட்டு வெளியேறியதா இல்லையா என்பதே இந்த 'டாக்ஸி வாலா'.
காமெடியுடன் பேய் படம் என்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தோசை சாப்பிடுவது போல அடிக்கடி நிகழ்வது. தெலுங்கில் இந்த பாணியை பயன்படுத்தியிருக்கிறார்கள். காமெடி, முதல் பாதியில் சிறப்பாகவே சிரிக்கவைக்கிறது. மாமா பாத்திரத்தில் வரும் மதுநந்தன், 'ஹாலிவுட்' பாத்திரத்தில் வரும் விஷ்ணு கூட்டணி கலக்கல். ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏற்றவாறு ஹாலிவுட் படங்களின் டைட்டில்களை வைத்து அந்தப் பையன் அடிக்கும் கௌண்டர்கள் கலக்கல். பேய் பங்களா காமெடி, டெட் பாடி காமெடி எல்லாம் நமக்கு சுந்தர்.சி, திகட்டத்திகட்டப் புகட்டியவை. கொஞ்சம் திகில், கொஞ்சமே கொஞ்சம் காதல், நிறைய சிரிப்பு என ஓரளவு ஓடிவிடுகிறது முதல் பாதி.
இரண்டாம் பாதியில் எப்படியும் பேய்க்கு ஃபிளாஷ்பேக் சொல்லியாகணும் இல்லையா? அங்கதான திகில் பட இயக்குனர்களுக்கு சோதனையே இருக்கும்? அந்த சோதனையை கொஞ்சம் தட்டுத்தடுமாறி கடந்திருக்கிறார் இயக்குனர் ராகுல் சாங்கிருத்யன். பேயின் கதையை சில கொலைகள், பாதிக்கப்பட்ட பெண், பழிவாங்க வருகிறாள் என்று சிம்பிளாக முடித்துவிடாமல் வேறுபடுத்திக்காட்ட 'ஆஸ்ட்ரல் ப்ரொஜெக்ஷன்' என்று அறிவியலுக்குள் போயிருக்கிறார். ஆனால், அதில் சொல்லும் கதைக்கு வழக்கமான பேய் கதையே பரவாயில்லை என்ற அளவில் அது இருக்கிறது. மனிதனின் மூளை செயல்படும் விதத்தை அப்படியே பதிவு செய்து அவர் நினைப்பதை அவர் ஆவியைக் கொண்டு செய்கிறதாம் ஒரு மெஷின். ஒரு வயர் கனெக்ஷனாவது கொடுத்திருக்கலாம். ஒரு வேளை வைஃபையில் கனெக்ட் செய்வார்கள் போல... பேய்ப் படமாக இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா? இருந்தாலும் எல்லாம் முடிந்து இறுதியில் படம், வருத்தப்படவைக்காத ஒரு பொழுதுபோக்காகிறது.
விஜய் தேவரகொண்டா... படத்தின் மிகப்பெரிய ஈர்ப்பு இவரே. அசால்ட்டான இளைஞனாக, முத்தம் கேட்டு அழும் காதலனாக, பயந்து நடுங்கும் அப்பாவியாக என எப்படி வந்தாலும் நம்மை ரசிக்கவைக்கிறார். பேயிடம் ஃப்ரெண்ட்ஷிப் வைக்கும்போதும், அதன் உண்மை ரூபம் பார்த்து சண்டை போடும்போதும் விஜய், ரசிகைகளிடம் 'ஹார்ட்டின்' ஸ்மைலீக்களைப் பெறுகிறார். விஜய் தேவரகொண்டா வந்தா மட்டும் போதும் என்னுமளவுக்கு தியேட்டரில் உற்சாகம். நாயகி பிரியங்கா ஜவால்கர், 'மாட்டே வினதுங்கா... வினதுங்கா' என பாடும் அளவு அழகாக இருக்கிறார். ஆனால், படத்தில் நாயகனுக்கு தேவைப்பட்டால் மட்டுமே வருகிறார். அவரைத் தாண்டி மனதில் நிற்பவர் மாளவிகா நாயர். நல்ல பாத்திரம், நல்ல நடிப்பு. வில்லன்கள் வழக்கமான வில்லன்கள்தான், சிறப்பொன்றுமில்லை, குறையொன்றுமில்லை.
ஜேக்ஸ் பிஜோயின் இசையில் 'மாட்டே வினதுங்கா... வினதுங்கா', 'இன்கேம் இன்கேம்'க்கு கொஞ்சம் கீழே இருக்கிறது. பின்னணி இசை திகிலை சரியாகக் கடத்துகிறது. சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு இருளை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறது. அவரே படத்தொகுப்பையும் செய்திருக்கிறார். தான் படமாக்கிய காட்சிகளை வெட்ட மனமில்லாமல் படத்தை அதன் போக்குக்கு நீள விட்டிருக்கிறார். கொஞ்சம் குறைத்து செதுக்கியிருக்கலாம். மொத்தத்தில் 'டாக்ஸி வாலா', விஜய் தேவரகொண்டாவுக்கு ஒரு சாதாரண பொழுதுபோக்குப் படம். தொடர்ந்து இந்த சாதாரணங்கள் உதவாது. ஆனால், தெலுங்கு தேசத்தில் 'சாதா'க்களை ஸ்பெஷலாக செய்தவர்கள் வெற்றி பெற்றது வரலாறு. என்றாலும், வழக்கத்தைத் தாண்டிய படங்களால் கவனிக்கப்பட்டவர் விஜய் தேவரகொண்டா. எந்தப் பாதையில் பயணிப்பார் பார்ப்போம்.