இந்திய அளவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இசையமைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது தமிழில் சிம்புவின் 'பத்து தல', ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்', மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் 'மாமன்னன்' உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைக்கிறார். இது போக மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள புதிய படத்திலும் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த நிலையில் ஆஸ்கருக்கு தகுதியற்ற படங்களும் அனுப்பப்படுகின்றன என ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அவர் கூறுகையில், "சில நேரங்களில் நமது திரைப்படங்கள் ஆஸ்கர் வரை செல்கின்றன. ஆனால் வெற்றி பெறுவதில்லை. அதே சமயம் சில தகுதியற்ற படங்களும் ஆஸ்கருக்கு அனுப்பப்படுகின்றன. அதை பார்க்கும் போது அதை அனுப்ப வேண்டாம் எனத் தோன்றும். சில சமயங்களில் மூன்றாவது நபர்கள் மூலம் தான் இங்கு என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அப்படி நடக்காமல் நேரடியாக நமக்கு தெரியும்படி இருக்க வேண்டும் என எண்ணுகிறேன்" என்றார்.
ஏ.ஆர்.ரஹ்மான் 2009 ஆம் ஆண்டு நடந்த 81வது ஆஸ்கர் விழாவில் 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்காக சிறந்த பாடல் மற்றும் சிறந்த பின்னணி இசை பிரிவில் இரண்டு ஆஸ்கர் விருதுகள் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். பின்பு அவர் இசையமைத்த 127 ஹவர்ஸ் (127 Hours) படம் 83வது ஆஸ்கர் விருதில் சிறந்த பாடல் மற்றும் சிறந்த பின்னணி இசை ஆகிய பிரிவில் நாமினேஷன் ஆனது. ஆனால் வெற்றி பெறவில்லை.
95வது ஆஸ்கர் விழா சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. அதில் இந்திய மொழி படங்களான 'ஆர்.ஆர்.ஆர்' சிறந்த பாடல் பிரிவிலும் 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' சிறந்த ஆவண குறும்படம் பிரிவிலும் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.