ராஜா கிருஷ்ணா மேனன் இயக்கத்தில் இஷான், மிருணாள் தாக்கூர் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான இந்தி படம் ‘பிப்பா’. இந்தப் படம் 1971 ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போரில் கேப்டன் பல்ராம் சிங் மேத்தாவின் செயல்களை விவரிக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்த நிலையில், ‘கரார் ஓய் லூஹோ கோபட்’ என்ற பாடல் சர்ச்சையாகியுள்ளது.
இந்தப் பாடல் வங்காளக் கவிஞர் காசி நஸ்ருல் இஸ்லாம் என்பவரால் 1922 ஆம் ஆண்டு எழுதி இசையமைக்கப்பட்ட நிலையில், இந்த காலத்துக்கு ஏற்ற வகையில் மறு உருவாக்கம் செய்து பயன்படுத்தியிருந்தார் ரஹ்மான். ஆனால் காசி நஸ்ருல் குடும்பத்தினர், இந்தப் பாடலைப் பயன்படுத்தத்தான் அனுமதி அளித்தோம், மற்றபடி டியூனை அல்லது ரிதம் உள்ளிட்டவற்றை மாற்றுவதற்காக அல்ல எனத் தெரிவித்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து பிப்பா படத் தயாரிப்பு நிறுவனம், இந்த சர்ச்சை தொடர்பாக மன்னிப்பு கோரியுள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், “மறைந்த கவிஞர் காசி நஸ்ருல் இஸ்லாம் மீது எங்களுக்கு பெரிய மரியாதை உள்ளது. பாடல் வரிகளைப் பயன்படுத்த கவிஞரின் குடும்பத்தாரிடம் முறையான அனுமதி வாங்கியுள்ளோம். பாடலின் கலாச்சார முக்கியத்துவத்திற்கு மரியாதை செலுத்துவதே எங்கள் நோக்கம். ஆனால் அவர்களின் உணர்ச்சிப்பூர்வமான தொடர்பை நாங்கள் புரிந்துகொள்கிறோம். எங்களின் விளக்கம் அவர்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.