இந்திய திரைப்படத் துறையில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ. ஆர் ரஹ்மான், தமிழ், இந்தி, ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் பணியாற்றி வருகிறார். இசையமைப்பைத் தாண்டி 'லீ மஸ்க்' என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படம் கடந்த ஆண்டு உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. விர்ச்சுவல் ரியாலிட்டி படமாக உருவாகியுள்ள இப்படத்தை ரஜினிகாந்த், விக்னேஷ் சிவன், நயன்தாரா உள்ளிட்டோர் பார்த்து பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில் இப்படம் உட்பட நிறைய விஷயங்கள் குறித்து பிரபல ஆங்கிலப் பத்திரிகையான ஃபோர்ப்ஸ் இதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் நிறைய விஷயங்களைப் பகிர்ந்துள்ள நிலையில் அதன் ஒரு பகுதியில், "ஒரு இந்திய இசையமைப்பாளராக, ஆஸ்கர் விருது மற்றும் பல வெற்றிகளைப் பெறும்போது, நீங்கள் புறா கூட்டினுள் அடைபட்டுவிடுவீர்கள்.
நான், 127 ஹவர்ஸ் (hours), பீலே (Pele), மற்றும் பல படங்களில் பணியாற்றியபோதும், 'ஓ, ஒரு இந்திய படமா, ரஹ்மானிடம் செல்லலாம் என்ற தேவை இன்னும் உள்ளது. அது, அவ்வளவு மோசமில்லை. இருப்பினும் நான் நிறைய இந்திய படங்களுக்கு இசையமைக்கிறேன். எனக்கு இந்திய படங்களில் பணியாற்றுவது பிடிக்கும். அதில் நான் பெருமை கொள்கிறேன். ஆனால், இந்தியாவிற்கே தொடர்பில்லாத ஒரு படைப்பை நான் செய்யவேண்டும் என விரும்புகிறேன். ஹாலிவுட்டில் அது மாதிரி செய்வது மிகக்கடினமாகும். ஏனென்றால், இங்கு அனைத்து இடங்களும் எடுக்கப்பட்டுவிட்டன", என சற்று வேதனையுடன் கூறியுள்ளதாகத் தெரிகிறது.