95வது ஆஸ்கர் விருது விழா பிரமாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்தியாவின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடல் என்ற பிரிவிலும், 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' படம் சிறந்த ஆவணக் குறும்படம் என்ற பிரிவிலும் ஆஸ்கர் விருது வென்று சாதனை படைத்துள்ளன. முதன்முறையாக இந்திய மொழி சார்ந்த படங்கள் ஆஸ்கர் விருதை வென்றுள்ளதால் பலரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணி, மேடையில் படக்குழுவினரின் பெயரைச் சொல்லி பாட்டு பாடியே ஆங்கிலத்தில் நன்றி தெரிவித்திருந்தார். மேலும் கார்த்திகி கோன்சால்வ்ஸியும் ஆங்கிலத்தில் படக்குழுவுக்கு நன்றி தெரிவித்தார். இந்த நிலையில் இரண்டு படங்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள ஏ.ஆர். ரஹ்மான், நேற்று இரவு திடீரென்று தமிழ் குறித்து விவேக்கிடம் விஜயகாந்த் பேசும் ஒரு காட்சியை ஒரு ரசிகர் பதிவிட்டிருந்த நிலையில் அதனை ரீட்வீட் செய்துள்ளார். அந்த வீடியோவில், "தமிழன் என்று சொல்லடா... தலை நிமிர்ந்து நில்லடா..." என்று விஸ்வநாதன் ராமமூர்த்தி படத்தில் விஜயகாந்த் பேசும் வசனம் இடம்பெற்றிருந்தது. மேலும் "காமெடி லெஜெண்டை மிஸ் செய்கிறோம். பேரிழப்பு" எனக் குறிப்பிட்டுள்ளார்.
விவேக்கை நினைவூட்டும் விதமாக ஏ.ஆர். ரஹ்மான் பதிவிட்டிருந்தாலும் ஆஸ்கர் விருது வழங்கப்பட்ட அதே நாளில் திடீரென்று தமிழ் குறித்து அந்த வீடியோ பேசுவதால் பலருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு 81வது ஆஸ்கர் விருது விழாவில் கீரவாணி வாங்கிய அதே பிரிவில் ஆஸ்கர் வாங்கிய ஏ.ஆர். ரஹ்மான் மேடையில் படக்குழுவிற்கு நன்றி சொல்லிவிட்டு கடைசியாக தமிழில் "எல்லா புகழும் இறைவனுக்கே" என அவரது தாய்மொழியான தமிழில் பேசியிருப்பார். ஆனால் தற்போது விருது வென்ற கீரவாணி அவரது தாய் மொழியான தெலுங்கில் எதுவும் பேசவில்லை. இதனால் உயரிய விருதுகள் வென்றாலும் தாய்மொழியில் பேச வேண்டும் என மறைமுகமாக ஏ.ஆர். ரஹ்மான் கூறுகிறாரா என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.
Missing comedy legend Vivek ..What a great loss 😢 https://t.co/RO4yPIGszB— A.R.Rahman (@arrahman) March 13, 2023