ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'லால் சலாம்'. இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பிப்ரவரி 9ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. கடந்த 26ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் படத்தின் அனைத்து பாடல்களும் வெளியான நிலையில் 'திமிறி எழுடா' என்ற பாடலில் மறைந்த பின்னணி பாடகர்களான ஷாகுல் ஹமீத் மற்றும் பம்பா பாக்கியா ஆகியோரின் குரல்களை, ஏஐ (AI) தொழில்நுட்பம் மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் பயன்படுத்தியுள்ளார். இது பலரது கவனத்தை பெற்றுள்ளது.
இந்த நிலையில் 'திமிறி எழுடா' பாடலில் மறைந்த பாடர்களின் குரலை பயன்படுத்தியதற்கு அவர்களின் குடும்பத்தில் அனுமதி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பகிர்ந்துள்ள பதிவில், “அவர்களின் குரலை ஏஐ மூலம் பயன்படுத்தியதற்காக, அவர்களின் குடும்பத்தாரிடம் முறையான அனுமதி பெற்றுள்ளோம். மேலும் அதற்குத் தகுந்த சன்மானமும் கொடுத்துள்ளோம். தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தினால் ஒருபோதும் அது அச்சுறுத்தலாகவும், தொல்லையாகவும் இருக்காது” என குறிப்பிட்டுள்ளார்.