
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தமிழில் சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி படத்தை எடுத்து வந்த நிலையில் அதே சமயம் இந்தியில் சல்மான் கானை வைத்து ‘சிக்கந்தர்’ என்ற தலைப்பில் ஒரு படத்தை எடுத்து முடித்துள்ளார். முதல் முறையாக சல்மான் கானுடன் கூட்டணி வைத்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சஜித் நதியாத்வாலா தயாரித்துள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், பிரதீக் பாப்பர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் பாடல்களுக்கு பிரிதம் சக்ரவர்த்தி இசையமைத்திருக்கப் படத்தின் பின்னணி இசையை சந்தோஷ் நாராயணன் கவனித்துள்ளார். படத்தின் டீசர் முன்னதாக வெளியான நிலையில் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இப்படம் ரமலான் பண்டிகையை முன்னிட்டு வருகிற 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனால் படத்தின் புரொமோஷன் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது.
அந்த வகையில் சல்மான் கான் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸுடன் பாலிவுட்டின் மற்றொரு முன்னணி நடிகரான ஆமீர்கானும் கலந்து கொண்டு ஒரு நேர்காணல் கொடுத்துள்ளனர். இதில் சல்மான் கானும் ஆமிர் கானும் ஏ.அர்.முருகதாஸிடன் இரண்டு பேரில் யார் நல்ல நடிகர், யார் நல்ல டான்சர், யார் உண்மையான சிக்கந்தர்... இது போன்ற பல கேள்விகளை ஏ.ஆர்.முருகதாஸிடம் ஜாலியாக கேட்கின்றனர். அதற்கு பதில் சொல்ல முடியாமல் மாட்டிக்கொண்டு தவிப்பது போல் ஏ.ஆர்.முருகதாஸ் மழுப்பலான பதிலை சொல்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் ஆமிர்கானை வைத்து கஜினி பட இந்தி ரீமேக்கை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.