Skip to main content

நடிகை மீது வழக்கு... ஆதாரங்களைத் திரட்டும் இயக்குனர்!

Published on 30/10/2020 | Edited on 30/10/2020

 

anurag kashyap

 

பிரபல பாலிவுட் இயக்குனரான அனுராக் காஷ்யப் மீது கடந்த மாதம், இந்தி நடிகை பாயல் கோஷ் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். அதனையடுத்து இந்தி திரையுலகம் பரபரப்பானது. இதுகுறித்து, அனுராக் காஷ்யப் மறுப்புத் தெரிவித்த நிலையிலும், இந்த சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. மேலும், அனுராக் காஷ்யப்பிற்கு ஆதரவாக, அவரது முதல் மனைவி ஆர்த்தி பஜாஜ் மற்றும் அவரது இரண்டாவது மனைவி கல்கி ஆகியோர் கடிதம் வெளியிட்டுள்ளனர்.

 

அதேபோல, அனுராக் காஷ்யப்புடன் ஒன்றிணைந்து வேலை பார்த்த ஹீரோயின்கள் மற்றும் பெண் பணியாளர்கள் அவருக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தார்கள். மேலும், பலரும் அவருக்கு எதிராகவும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

 

இதனைத் தொடர்ந்து, அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ், மும்பை, வெர்ஸோவா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரையடுத்து அனுராக் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. ஆனால் அனுராக் காஷ்யப் கைது செய்யப்படவில்லை.

 

இந்நிலையில், இந்திய குடியரசுக் கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அதவாலேவை நேரில் சந்தித்து அனுராக் காஷ்யப் மீது நடவடிக்கை எடுக்குமாறும், மும்பை காவல்துறை இந்த விவகாரத்தில் மெத்தனமாகச் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார் பாயல் கோஷ்.

 

இதனைத் தொடர்ந்து இயக்குனர் காஷ்யப்பிடம் விசாரணை மேற்கொள்ள வெர்ஸோவா காவல் நிலையம் சம்மன் அனுப்பியது. அதன்பின் அனுராக் காஷ்யப் தனது வழக்கறிஞருடன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அண்மையில் பாயல் கோஷ், ராம்தாஸ் அத்வாலேவின் கட்சியில் இணைந்து, இந்திய குடியரசுக் கட்சியின் பெண்கள் அணித் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார். 

 

தற்போது பாயல் கோஷுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும், இந்த வழக்கு எவ்வளவு தீவிரமாக, எத்தனை நாட்கள் நடந்தாலும் அதைக் கண்டிப்பாக நடத்துவது என்றும் அனுராக் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தன் மீது குற்றம் இல்லை என்று நிரூபிக்க அனுராக் அனைத்து விதமான ஆதாரங்களையும் சேர்த்து வருகிறார்.

 

cnc

 

மேலும், அனுராக் தன்னைப் பற்றி கவலைப்படவில்லை என்றும், தனது குடும்பத்தினர் எதிர்கொண்டு வரும் மனஅழுத்தமே அவருக்குக் கவலை தருவதாகவும் அனுராக் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், அவர் இத்தனை நாட்கள் பேசிவந்த கொள்கைகளுக்கு முரணாக இருக்கும் இந்தக் குற்றச்சாட்டைப் பொய்யென்று நிரூபிக்க வேண்டிய சூழலிலும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்