சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு, படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அண்ணாத்த படத்தில் இடம்பெற்றுள்ள 'வா சாமி...' என்ற ஹிட் பாடலை எழுதிய பாடலாசிரியர் அருண் பாரதியிடம் நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் உரையாடினோம். அண்ணாத்த படத்திற்குப் பாடல் எழுதியது, இயக்குநர் சிவாவுடனான அறிமுகம், நடிகர் அஜித்துடனான சந்திப்பு எனப் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பகிர்ந்து கொண்டார். அவை பின்வருமாறு...
வா சாமி பாடலுக்கான சூழலைச் சிவா சார் சொல்லும்போதே வீர விநாயகா பாடல் எப்போதெல்லாம் விநாயகர் சதுர்த்தி வருகிறதோ அப்போதெல்லாம் ஒலிக்கிறது. அதேபோல சிறு தெய்வங்களுக்கான பாடலாக இப்பாடல் இருக்க வேண்டும் என்றார். அவர் சொல்லும்போதே பாடலின் சூழல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதே நேரத்தில் ரஜினி சார் ரசிகர்களுக்கும் பாடல் பிடிக்க வேண்டும். இவை இரண்டையும் கவனத்தில் வைத்து எழுதிய பாடல்தான் வா சாமி. இந்தப் பாடல் இமான் சாரின் மெட்டுக்கு எழுதிய பாடல். நான் எழுதிக்கொடுத்த முதல் பல்லவியே சாருக்கு மிகவும் பிடித்துவிட்டது. பாடலை எழுதும்போதே இப்பாடல் பிரம்மாண்டமாகப் படமாக்கப்பட உள்ளதாகச் சிவா சார் கூறினார். ஊரில் குலசாமி வழிபாடுகளில் இந்தப் பாடல் கட்டாயமாக ஒலிக்கப்படும் என்றும் கூறினார். அவர் சொல்லும்போதே இது வதம் தொடர்பான பாடல் என்று புரிந்தது. அதனால்தான், உக்கிரங்கள் ஒன்றுபட... உச்சி வானம் ரெண்டுபட... உருமா கட்டி ஊர காக்க வாரான் வாரான்... மதுரை வீரன் மதம் கொண்டு வாரான்... என ஆக்ரோஷத்தின் வெளிப்பாடாக அப்பாடலை எழுதினேன்.
சிவா சாருடைய படங்கள் பக்கா கமர்ஷியலாக இருக்கும். குடும்பத்தோடு திரையரங்கில் சென்று பார்க்கலாம் என்ற உணர்வைக் கொடுக்கும். இயக்குநராக அவரை எனக்கு மிகவும் பிடிக்குமென்பதால் நான் எழுதிய புதிய பானை பழைய சோறு என்ற கவிதைப் புத்தகத்தை அவரைச் சந்தித்துக் கொடுத்தேன். அந்தப் புத்தகத்தைக் கொடுக்கும்போது இவர் நமக்குப் பாட்டு தருவார் என்றெல்லாம் நினைத்துப் பார்க்கவில்லை. நான் கொடுத்த நேரத்தில் அவர் விஸ்வாசம் படத்தின் வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.
என்னுடைய கவிதை முழுக்க முழுக்க தேனி வட்டார வழக்கில் இருந்ததாலும் என்னுடைய கவிதைகள் அவருக்கு மிகவும் பிடித்திருந்ததாலும் விஸ்வாசம் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. இப்பதான் சார் உங்களைச் சந்தித்தேன். அதுக்குள்ள எனக்கு பாட்டு கொடுக்குறீங்க. நிஜமாவா என்றேன். இல்லை சார். உங்ககிட்ட திறமை இருக்கு. உங்களால முடியும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு என்றார். விஸ்வாசம் படத்தில் தல்லே தில்லாலே பாடல் எழுதி முடித்தபிறகு என்னை வெகுவாக பாராட்டினார். வைரமுத்து சார் கிட்ட பாட்டு வாங்குன மாதிரி இருக்கு. எதை எடுக்குறது. எதை நீக்குறதுனு தெரியல. அந்த அளவிற்கு நல்லா எழுதிருக்கீங்க என்றார். இதுவரை எனக்குக் கிடைத்த உச்சபட்ச பாராட்டுகளில் இதுவும் ஒன்று.
விஸ்வாசம் படப்பிடிப்பு தளத்தில்தான் அஜித் சாரை சந்தித்தேன். இவர்தான் சார் நம்ம படத்துல டங்கா டங்கா பாட்டு எழுதுன கவிஞர் என்று அஜித் சாரிடம் சிவா சார் அறிமுகப்படுத்தினார். அஜித் சார் கைகொடுத்துவிட்டு ரொம்ப நன்றி சார். எனக்கு நல்ல பாட்டு குடுத்துருக்கீங்க என்றார். இவ்வளவு பெரிய படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்ததற்கு நான்தான் சார் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும் என்றேன். படப்பிடிப்பு முடியவும் நிச்சயமாக நாம் சந்திப்போம் என்றார். சாப்டீங்களா என்று அக்கறையோடு கேட்டார். நான் என்னுடைய புத்தகத்தை அவருக்குப் பரிசாக குடுத்தேன். அந்த சந்திப்பு அனுபவமே சிறப்பாக இருந்தது.