விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கியக் கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, சம்யுக்தா, ஷாம், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். தில்ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
தெலுங்கில் 'வாரசுடு' என்ற தலைப்பில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் "தெலுங்கு திரைப்படத் துறையைக் காப்பாற்ற வேண்டும் எனும் நோக்கில் சங்கராந்தி(பொங்கல்) மற்றும் தசரா(விஜயதசமி) ஆகிய பண்டிகைகளின் போது, திரையரங்குகளில் நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் உள்ளது. எனவே வினியோகஸ்தர்கள் இந்த முடிவைப் பின்பற்றவேண்டும்" என தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியிருந்தது.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் சிலர் இந்த அறிக்கை தொடர்பாக தங்களது கருத்துக்களைப் பகிர்ந்தனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் லிங்குசாமி, பேரரசு மற்றும் நடிகர் கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் விஜய்க்கு ஆதரவாக தங்களது கருத்தைப் பகிர்ந்திருந்தார்கள். நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், "படம் வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை. சொன்னபடி பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும்" எனத் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பில் யானைகள், குதிரைகள் உள்ளிட்ட விலங்குகளை முறையாக அனுமதியில்லாமல் பயன்படுத்தியுள்ளதாகத் தகவல் வெளியானது. இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நிருபர் செய்தி சேகரிக்கச் சென்றபோது அவரை விஜய் ரசிகர்கள் கடத்த முயன்றதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இந்நிலையில், 'வாரிசு' படத்திற்கு மீண்டும் ஒரு சிக்கல் வந்துள்ளது. அதன்படி 'வாரிசு படக்குழுவுக்கு இந்திய விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். படப்பிடிப்புக்கு அனுமதியின்றி விலங்குகளைப் பயன்படுத்தியுள்ளதாக புகார் வந்துள்ளது தொடர்பாக 7 நாட்களில் விளக்கம் தரும்படி அதில் கூறப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக விரைவில் வாரிசு படக்குழு பதில் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.