Skip to main content

விஜய் vs அன்புமணி ராமதாஸ்! என்ன நடக்கும்?

Published on 23/06/2018 | Edited on 24/06/2018

   ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளுக்கு முந்தைய நாளான ஜூன் 21-ஆம் தேதி மாலை வெளியானது.  'சர்க்கார்' என பட தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரில் நடிகர் விஜய் வாயில் சிகரெட்டோடு காணப்படுகிறார். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற இந்த போஸ்டருக்கு இதே அளவு எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது. பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இந்த போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து தன் ட்விட்டர் பதிவிட்டுள்ளார். 

 

vijay

 

அதில்...  "இனி சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன்" என விஜய் கூறிய பழைய செய்தியை பேப்பரை பதிவிட்டுள்ளார். மேலும் "அந்த சிகரெட் மட்டும் இல்லாமல் இருந்தால் இன்னும் ஸ்டைலாக நீங்கள் காட்சி தருவீர்கள்" என்று மற்றொரு பதிவில் பதிவிட்டு அதோடு 'புகைப்பழக்கம் கொல்லும், புகைப்பழக்கம் புற்றுநோயை ஏற்படுத்தும்' என்ற வாசகத்தையும் அவர் ஹேஷ்டேகாக பயன்படுத்தியுள்ளார்.

மேலும் இன்னொரு பதிவில் ''இந்த சிகரெட்டோடு உங்களை பார்ப்பது வெட்கமாக உள்ளது" என பதிவிட்டு தன் எதிர்ப்பை காட்டியுள்ளார். ஏற்கெனவே இதே ஏஆர். முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி படத்தின் போஸ்டரிலும் விஜய் சுருட்டு பிடிப்பது போல இருந்ததற்கு அப்போதே எதிர்ப்பு வந்தது குறிப்பிடத்தக்கது.

 

vijay

 

பாமக நிறுவனர் ராமதாஸும் விஜயின் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்...

"திரைப்படத்தில் வரும் காட்சிகளால் இளைஞர்கள் புகைக்கு அடிமையாகி விடக் கூடாது என்பதால்தான் முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் புகைக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்ததை எதிர்த்து ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது, அவரது வேண்டுகோளை ஏற்று நடிகர் விஜய் உள்ளிட்ட ஏராளமான தமிழ் மற்றும் இந்தி திரைப்பட நடிகர்கள் புகைக்கும் காட்சிகளில் நடிப்பதை கைவிட்டனர்.

 

 

தொடக்கத்தில் இத்தகைய அறிவுரைகளை மதிக்காத நடிகர் ரஜினிகாந்த், பின்னர் 2012-ஆம் ஆண்டு அவரது பிறந்த நாள் விழாவில் பேசும் போது,‘‘அவர் (இராமதாஸ்) சொன்ன கருத்து ரொம்ப நல்ல கருத்து. அதற்கு பிறகு நான் நடிக்கின்ற படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சியை வைக்கவில்லை. ரசிகர்கள் புகைப் பழக்கத்தை கைவிட வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார். இத்தகைய நடவடிக்கைகளால் புகையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், இப்போது சிகரெட் சாத்தானை தூக்கிப் பிடிக்கும் செயல்களில் நடிகர் விஜய் ஈடுபடக்கூடாது..." என்று குறிப்பிட்டுள்ளார். 

இவர்களது கருத்தை எதிர்த்து சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். 'சிகரெட் என்பது தவறான விஷயம்தான். அதை ப்ரமோட் செய்வது தவறுதான். ஆனால், அதை விட தவறான விஷயம் ஜாதி. உங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் அதை ப்ரமோட் செய்கிறார்கள்' என்ற கருத்து அவர்களின் பதிவுகளில் இருக்கிறது.     

 

 

 
கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான 'பாபா' படத்தில் ரஜினி புகை பிடிப்பது போன்ற காட்சிகளை நீக்க வேண்டுமென கூறி, அது நடக்காததால் தமிழகத்தின் வடமாவட்டங்களில் பாமகவினர் 'பாபா' படத்தின் படப்பெட்டிகளைக் கைப்பற்றி பல திரையரங்குகளில் படம் வெளியாவதைத் தடுத்தனர். இப்பொழுது 'சர்க்கார்' படத்தை எதிர்க்கின்றனர். என்ன நடக்குமென்பதைப் பார்ப்போம்.     

 

 


 

 

   

சார்ந்த செய்திகள்